உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

இசாக் மார்க்’ நிழற்குடை! -த.பழமலய்


இசாக் மார்க்’ நிழற்குடை!
த.பழமலய்

காதல் என்பது எதுவரை?
கழுத்தில் தாலி விழும்வரை என்றார் கண்ணதாசன். காலம் மாறிக் கொண்டே இருக்கிறது.
காதல் என்பது எதுவரை?

கனவில் இன்னொருவர் வரும் வரை‡என்று சொல்லிவிடலாம். இன்றைக்கு ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் சூழல் பலவாகிவருகிறது. தமயந்தி முன் நலன்கள் பலராக நிற்கிறார்கள்.

அறிமுகம், பழக்கம், காதலாகி விடமுடியாது. தேர்தலில் பலர் நிற்கும்போது தேர்ந்தெடுப்பவர்கள் குழம்பித் தான் போகிறார்கள். தேர்தலையே புறக்கணிக்கின்ற அளவுக்கும் குழம்பிவிடுகிறார்கள்!

கனவு காதலாகாது. கனவில் வருகிறவர்கள் யாவரும் காதலர்களாகிவிடமாட்டார்கள். இன்றைக்குக் கனவுக் கன்னியோ கனவுக் கனவுக்காளையோ ஒருவருக்கு ஒருவராக இல்லை. ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுப்பவர்களாக இருக்கிறார்கள்.
திருவள்ளுவர் பெண்ணைத்தான் ‘ஆய் மயில்’ என்றார். அவள் ஆணை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டியவளாக இருந்தாள். இன்று ஆணையும்‘ஆய்காளை’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அவனும் அவளை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டியவனாக இருக்கிறான். அவ்வளவுக்குக் காதல் சந்தையில் கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்துவிட்டது! இதில், ஒன்பது ரூபாய் நோட்டு, கறுப்புப்பணம்...என்றெல்லாம் கூட இருக்கின்றன!

செங்கல் அறுக்கிற மாதிரி செய்கிற காரியம் அல்ல காதல். ஆனால் இன்றைக்கு எதார்த்தத்திலும் சரி, இலக்கியத்திலும் சரி, அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. கன்னி, காளை, என்றால் காதல் செய்ய வேண்டும். கவிஞன், எழுத்தாளன் என்றால், காதலைப் பற்றி எழுத வேண்டும்.

காலந்தோறும் காதலைப்பற்றி எழுத வேண்டியது தான். எழுதுகிறவர்களின் சமூகக் கடமையும் அது. ஆனால் அது, பொழுது போக்காக இருக்கக் கூடாது, பொறுப்புள்ள வேலையாக இருக்க வேண்டும். கவிஞர் இசாக் பருவ வெயிலுக்கு நிழற்குடை தயாரித்திருக்கிறார். ‘இசாக் மார்க்’ நிழற்குடை! இது, காளான் குடை இல்லை என்பது பெரிய ஆறுதல்.

தூரதேசம், முத்தங்களைத் தொலைபேசி முத்தங்களாக்கி விட்டன. பார்த்து இரசித்த வான ஊர்தி பகையாகத் தெரிகிறது. எண்ணெய் தேசத்தில் அவன் இருந்தால், இங்கே எரிபவளாக இவள் இருக்கிறாள்!

காதல், கோலம் என்றால், அதற்கு ஒருவர் புள்ளி வைத்தால், இன்னொருவர் கோடு இழுக்க வேண்டும். ஒருவரே செய்வதற்குப் பெயர், காதல் அல்ல. அது வேறு அடிமை செய்தல் அல்லது ஆட்டிப் படைத்தல்.

காதல் விட்டுக் கொடுப்பது அல்ல, சரிநிகர் சமானம் பாராட்டுவது. இதனால்தான், இசாக்கின் காதலன் அடீ என்றால், காதலி, அடெய் என்றால் சமத்துவம் சரிதான். என்றாலும் இது நில உடைமைச் சமுதாயத்தின் நிழல்படிந்த சொல்லாட்சி, அணுகுமுறை. நாம் விழைவது தோழமை. தனிமையிலும் சரி, பொது இடத்திலும் சரி, ஒருவர் சுயமரியாதையை பொது ஒருவர் பாதிக்கக் கூடாது. அவமரியாதை அனு மதிக்கப் படக்கூடாதது. பெயர் சொல்லலாம், அல்லது தோழரே என்று விளித்துப் பேசலாம்.
உன் / பொய்க் கோபம் பற்றி / எனக்குத் தெரியாதா? / கிள்ளிய வானென்பதற்காக / மணம் / வீசவா மறுக்கும் மல்லிகை?”
இது ஒரு இசாக் மார்க் கவிதை. இது பொருள் விரிவுக்கு உரியதாக இருப்பது இதன் சிறப்பு. மல்லிகை கிள்ளியவன் என்பதற்காக மணக்கவில்லை, கில்லியதைக் கீழே போடாமல், மேலே மூக்குக்குத் துக்குகிறான் என்பதற்காகவே அது மணம் வீசுகிறது! அலட்சியப்படுவது அல்ல, அழகுப் பார்ப்பது காதல்!

கன்னக்குழி, பதுங்கு குழியாக இருக்கலாம். புதைகுழி ஆகிவிடக்கூடாது. முரண்படுவது, வில்லினை/ வில்லியை விரும்புவது மெய்யாக இருந்துவிடக் கூடாது. அவன் பணம் பூக்கிற செடியாக, அவள் குழந்தை காய்க்கிற மரமாக இல்லாமல், மனிதர்களாக வாழவேண்டும்.

இசாக், தன் கவிமனத்தால், காதல் கவிதைகளால், வெறும் காற்றைத் தென்றல் ஆக்குகிறார். அவர் கபடி விளையாடினால், அவர் காதலிக்கு மட்டும் அல்ல, நமக்கும் மூச்சு வாங்குகிறது. அவர் கவிதை நம்மை அப்படி ஆக்கிவிடுகிறது. காதலில் மூழ்குவது வாழ என்பது போல, அவர் கவிதைகளில் மூழ்குவது மகிழ என்பதாக, மனிதர்கள் ஆக என்பதாக இருக்கிறது.

ஒருவருக்குள் ஒருவரை ஒளித்து வைத்துக் காப்பது காதல், ஒருவரை ஒருவர் செதுக்கிச் சிலையாக்குவது காதல், மரணமல்ல உயிர்த் தெழுதல் காதல், கவிதையின் கடைசிவரி காதல்...என்றெல்லாம் மகிமைப் படுத்தப்படும் காதல், நவீன ஓவியம் போல ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பொருளை உணர்த்துவது என்றும் உணர்ந்து, உணர்த்துகிறார் இசாக்.
கவிஞருக்குக் கொலுசு பேசவில்லை, கால் பேசவில்லை, கொலுசு அணிந்த கால் பேசுகிறது. பேசும்! கவிதை பேசத் தெரியும் கவிஞருக்கு அவள் செருப்பு அணிந்த கால் பேசுவதையும் பேசத் தெரிய வேண்டும். அப்போது கவிஞருடைய நடை, ஒரு பாய்ச்சலாக இருக்கும்! நடையும் ஓட்டமும் போலக் கவிதைக்குப் பாய்ச்சலும் வேண்டும்.
சாலையின் /ஒரு பகுதியில் நீ/ மறு பகுதியில் நான்/ ஊர்திகளின் நெரிசலில் சிக்கி /பாலம்/ இந்தக் காதல்
இதில் விதி ஒன்று என்றால், விதி விலக்கு என்பது. காதலின் ஆதியும் அந்தமும் இதுதான். பாவப்பட்ட இந்தக் காதலைக் காப்பாற்றத்தான் தமிழில் காதல் கவிதைகள் தேவை, அகப்பாடல்கள் தேவை. இசாக் தன் பங்குக்குக் காப்பாற்றி உள்ளார்.