உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

பொருளற்ற சொல்

அப்பாவும் அம்மாவும்
கவனிப்பாரற்று காலத்தைக் கடத்துகிறார்கள்
அடிப்படை வசதியுமற்ற
என்
கிராமத்தில்!

எனக்கிணையானவளும்
வெளியிலும் சொல்லமுடியாமல்
வெட்கி
வெட்கி
சோகத்தில் கழிக்கிறாள்
தன்
விடியாத இரவுகளை !

வாரிசுகளும்
நாளு இடம் அழைத்துச்செல்ல
நல்லது கெட்டதுகளைச் சொல்லித்தர
ஆளின்றி
புழுங்கி
புழுங்கி
நகர்த்துகிறார்கள் நாட்களை !

எனக்கும் எவருமில்லை
இந்த
அந்நிய மண்ணில்
இருந்தும்
வெட்கமற்று சொல்லிக்கொள்கிறேன்
'நான்குடும்பக்காரன்';