உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

வைரமுத்துவின் "தோசை, சாம்பார், சர்க்கரை"
சமீபத்தில் இரண்டு நிகழ்வுகள் மகிழ்வானதாக நடந்தது. ஒன்று மும்பை தமிழ் உணர்வாளர் அண்ணன் குமணராசன் அவர்களுடனான சந்திப்பு, மற்றது கவிஞர் வைரமுத்து அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி.

முதல் நிகழ்ச்சி நாங்கள் நினைத்து போல சிறப்பாகவும் சிந்தனை பூர்வமாகவும் அமைந்திருந்தது, அண்ணன் குமணராசன் அவர்கள் எழுதிய 'பார்வையின் நிழல்கள்' பயண நூல் பற்றிய பகிர்வுக்கிடையே தமிழ் மொழி, இன, தேசிய பற்றிய விரிவான கருத்துகளும் பகிர்ந்துக்கொள்ளப்பட்டது.

அவரின் பயண நூலும் தமிழரின் வாழ்வியல் ஆதாரங்களை முன் வைத்தே எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்ணன் குமணராசன் அவர்களின் நூல் மற்றும் செயல்கள் பற்றி விரிவாக பிறகு பகிர்ந்துக் கொள்ளலாம்.

இரண்டாம் நிகழ்ச்சியில் நாங்கள் எதிர்பாத்ததைவிட மகிழ்வான முறையில் கவிஞர் வைரமுத்து அவர்களின் பேச்சு அமைந்திந்தது. தமிழர் பண்பாட்டு சிதைவுகள் பற்றிய கவலையையும், அதை பாதுகாப்பதன் அவசியத்தையும் வழக்கமான அவரின் கம்பீர குரலால் பதிவு செய்தார்.


அவரின் பேச்சின் போது மதுரை பகுதியில் தோசைக்கு சாம்பாரில் சர்க்கரை போட்டு தொட்டு சாப்பிடுவது பற்றி சொன்னார்.. தோசைக்கு இனிப்புமில்லாமல் காரமுமில்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட சுவையை தொட்டுக்கொள்வது தனி சுகம் என்பதை சுவைபட சொன்னார். இந்த கருத்தை ஒத்த நிகழ்வு ஒன்று சமீபத்தில் நடந்தது.

என் அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள உணவகத்தில் காலை உணவுக்காக அமர்ந்திருந்த போது.. எதிரில் அமர்ந்திருந்தவர் தோசையில் தேன் ஊற்றி தோசையை அதை காரமான சாம்பாரில் தொட்டு தொட்டு சாப்பிட்டார். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது, சாப்பிட்டவர் தமிழர் அல்ல. ஆப்பிரிக்கர் என்பது தான் என் வியப்பிற்கு காரணம்.

நாம் வரலாற்றின் மீது கவனம் செலுத்தாததன் விளைவே.. இந்த வியப்பு என்பது இன்று எனக்கு புரிந்தது. ஆம்.. அண்ணன் குமணராசன் அவர்களின் துணைவியார் நங்கை குமணன் அவர்கள் எழுதிய ''பெண்ணுரிமை பேணுவோம்'' என்னும் நூலில் பல்லாங்குழி பற்றிய கட்டுரையில் ஆப்பிரிக்கருக்கும் திராவிடருக்கும் உள்ள பண்பாட்டு ஒற்றுமை பற்றி சொல்லுகிறார். நைஜிரியாவில் ஆப்பிரிக்கர் திராவிட ஒப்பீடு என்னும் நூலும் வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தோசை, சாம்பார், இனிப்பு செய்தி மூலம் ஆப்பிரிக்கரும் திராவிடரே..
இருக்கலாம்.. ஏன் இருக்க கூடாது.