“உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.” – ரசூல் கம்ஸதோவ்
வாழ்க அநாகரீகம்
விரும்பி பலர்
கடமைக்காக பலர்
விருப்பமில்லாவிட்டாலும் பலர்
ஆண்டுக்கொருமுறைத்தானென்று பலர்
குழந்தைகளுக்காகவென்று
கூட்டாளிகளுக்காகவென்று
எப்படியோ
எல்லோரும் வெடிக்கிறார்கள்
தீபஒளி கொண்டாட்டமென்று.
தனிவெடி
சரடிவெடி
என்னை அதிர்வூட்டுகின்றன எல்லாவெடிகளும்
என் ஈழ உறவுகளின்
வாழ்வில் விழுந்தவற்றை நினைவூட்டி.
விருந்தினரையும்
கொன்றொழிப்பேனென்ற கொழுத்த
நாக்குடைய ராஐபக்சே நாகரீகமானவன்
தவறெனச் சுட்டி
கண்டிக்கத் துணிந்தவன்
அநாகரீகமானவன்
வாழ்க
அநாகரீக திபஒளி கொண்டாட்டம்.
எப்போதும் போலல்லாமல்
உன் நியாயமற்ற
உழைப்புத்
திருட்டுக்கு பலியாகி
ஏழ்மையின்
எல்லையில் வாழும்
கதறியழும்
கருத்த உருவம்
அதிர்ச்சியூட்டும்
சொல்லாயுதத்தோடு
நெருங்கிவர நீயுணர்வாய்
தனித்துறங்கும்
நள்ளிரவு பேரமைதியின் மெய்யழிந்து

அகிம்சை பேசும் அதிபயங்கரவாதிகள்.
சமீபகாலமாக வாயுள்ள சில உயிரினங்கள்
தங்களை அகிம்சை மூர்த்திகளாக
அடையாளம் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றன.
அன்பர்கள் கவனிக்க வேண்டும்
சமீபத்தில் நிகழ்ந்திருக்கும் மாபெரும் இன அழிப்புக்கு
அகிம்சை பேசும் இந்த இழிப்பிறவிகள்
வாய் திறவாதிருப்பதற்கு முக்கிய காரணம்,
அழிப்பின் அத்தனை அசைவும்
அகிம்சா மூர்த்திகளின் துணையோடு நிகழ்ந்திருக்கிறது.
படுகொலைகளை நிகழ்த்திய அரசபயங்கரவாதிகளின்
சார்பாக எவன் எவனோ பேசுகிறான்... எழுதுகிறான்..
அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் சார்பில் அழக்கூட
துணிவற்ற நடைபிணங்களாக.. நாம்.
எவன் வீரன்
எவன் கோழை
எவன் சொல்வது
எல்லாம் சூழல் சொல்லும்
நாளைய வரலாறு சொல்லும்.