பிள்ளைகளின் பிரதேசம்
இசாக்
நீ
இப்போது
பேசத்தொடங்கியிருக்கிறாய்
அது
உனக்கான மொழியாக ஒலிக்கிறது.
எங்கள்
பயிற்றுவிப்புகளுக்கு
இப்போது
உன்னிடம் அங்கீகாரமில்லை
நீ
நினைத்ததையே
உன் குரலில் பதிவு செய்கிறாய்
எல்லாவற்றுக்கும்
புதிய சொற்களை
பயன்படுத்தி சிரிக்கிறாய்
எங்கள்
விருப்பத்திற்கு
மொழிபெயர்த்து
மகிழ்ந்துக்கொள்கிறோம்.
@
சூரியன்
மறைந்தும் மறையாத
அடர்பகல் பொழுதின்
மென்தூறல்
இரசித்தல் அழகு
எழுந்து
நடைபயில தொடங்கியிருக்கும்
குழந்தை
உறங்கும் தருணங்களில்
@
உனக்கு
ஊட்டுவதற்காக
பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட
உணவை
உன்னைக்கடந்து செல்கிற
கோழிக்கும்
அமர்ந்து பறக்கும் காகத்திற்கும்
அள்ளி இரைத்து விளையாடுகிறாய்
அவற்றை
விரட்டமுனையும்
என்னைப்பார்த்து புன்னகைத்தபடி
@
தலையணையை
பொம்மைக்கு வைத்துவிட்டு
தரையில் தலைவைத்து
உறங்கிவிடுகிற
உன் காலத்தை
அறியாப்பருவம் என
அறிமுகப்படுத்தியுள்ளனர்
என் முன்னோர்
@
எங்களுக்குப் பழக்கப்பட்டவற்றை
உன்
உலகத்துக்குள்
திணிப்பதையே கடமையாக கருதுகிறோம்
எங்கள் கவனத்துள்
அகப்படாத அற்புதம்
உன் உலகமென்பதை புறக்கணித்தபடி
@
சிறை பற்றியான
புரிதல்களும்
இலக்கணங்களும்
அவரவர் உலகத்திற்கேற்ப மாறலாம்
குழந்தைகளின்
உலகத்தில்
வீடு சிறையாகியிருக்கலாம்
@
நன்றி : கணையாழி நவம்பர் 2011