

சூரியன்கள் ஒளிகுடித்த நிலாச்சோலை
#
எப்போதோ நிகழ்ந்தது
இப்போது நடந்ததைபோல
பசுமையாக நினைவில்
தமிழோசை
அரங்கேற்றம் அலுவகத்திற்கு
அருகெதிரில்
73 அபிபுல்லா சாலை
தான் இயக்கவிருந்த
“உள்ளேன் அய்யா” தொடக்கப் பணியில்
அண்ணன் அறிவுமதி
மூழ்கியிருந்த தருணம்
“உள்ளேன் அண்ணா” என
தம்பியாகி நெருக்கமானேன்.
பல துறைகளில்
இப்போது வெளிச்சப்பட்டுவிட்ட
பல முகங்கள்
அங்கே
அங்குமிங்கும்
அலைந்துத்திரிந்த பரபரப்பு.
முன்னோடி படைப்பாளிகள்
“தம்பி” என்றும்
துளிர் படைப்பாளிகள்
”அண்ணா” என்றும்
அன்பு தெளித்து
அழகுத் தமிழ் வரைந்த
சாரல் வீசும்
தொன்ம வாசல்
மெட்டு ஏர் பிடித்து
ஒழுங்குமாறாமல்
சொல்கள் தூவி
நல்லத் தமிழ்ப் பாடல்களை
விளைவித்த நிலம்.
நூல்கள்
புதிய வடிவில்வர
உறவுகள் கூடி
இரவுகளைத்திண்று
இலக்கிய விருந்து
சமைத்த பொழுதுகள்.
தாய்மைத் ததும்பும் அன்பும்
ஆத்திரம் மிக்க கொள்கைக் கோபமும்
சமவிகிதத்தில்
பரிமாறப்பட்ட
உன்னதக்கூடம்.
வயதில் முதியவரெனில்
”வாங்க அண்ணா” என்றும்
இளையவரெனில்
“வாங்க தம்பி” என்றும்
உள்ளே அழைத்து
உறவாக்கிக்கொள்ளும்
உயிர்பிழியும் தமிழ்க்குரல் ஒலிக்கும்
அற்புத அறை
அண்ணை
தம்பிகளைப் பிரசவித்த
அதிசய
வைத்திய சாலை
73 அபிபுல்லா சாலை.
பொருள்களையும் மனிதர்களையும்
வழியனுப்பிவிட்டு
நினைவுகளையும் உணர்வுகளையும்
நிறைத்துக்கொண்ட
189 அபிபுல்லா சாலையில்
அசையா உயிராகவும்
அப்பழுக்கற்ற உறவாகவும்
எங்களில் கலந்திருந்த
பூவரசும் வேப்பமும்
இப்போதும்
நிழல் தர காத்திரும்
இளைப்பாற
ஆயத்தமா?
இசாக்
29, திசம்பர் 2013