உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

அக்கரைக்கு இக்கரை

எழுதப்படுகிற கடிதங்களிலெல்லாம்
எழுதாமல்
இருந்ததில்லை
எவரும்
'விசா' வேண்டுமென்று!

உறவுகளும்
சிபாரிசு செய்கிறார்கள்
மடல்வழி
'எப்படியாவது பாத்து எடுப்பா'' என்று.

இங்கிருந்துவிட்டு சென்றவர்களின்
மடலுக்குள்ளும்
விசயமிருக்கிறது
கடவுச்சீட்டு நகலோடு.

சூழல் சொல்லிச்சொல்லி
எத்தனையெத்தனையோ கடிதங்கள்
எழுதி
எழுதி
தள்ளியாயிற்று.

தொலைப்பேசி தொடர்பின் போதும்
நலவிசாரிப்புக்குப்பின்
''விசா''செய்தி
மிக முக்கியமானதாகிறது.

எவனிடமாவது கெஞ்சிக்கேட்டு
விசா
வாங்கி
துபாய் அழைத்துவிட்டால்

வந்திறங்கியதும்
சொல்ல தவறிவதில்லை
எவரும்
''இப்படியெல்லாம்
இருக்குமென தெரிந்திருந்தால்
ஊர்லயே
ஏதாவது
தொழிலப்பாத்துக் கிட்டிருந்திருப்பேன்''