உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

என்ன செய்ய

மூன்று மாதம்
முழுதாக தங்கவில்லை
வீட்டில்.

அங்குமிங்கும்
பயணித்துப்பயணித்தே கழிந்தது
பல நாட்கள்
நண்பர்களைச் சந்திக்க.

சோகமாகி விட்டார்
அம்மா
பயணமாகும் நாள்
உறுதியானதிலிருந்தே!

அக்கா
தங்கைகளும்
அழுது புலம்புகிறார்கள்
அவ்வப்போது.

''மாமா..மாமா''ன்னு
ஏங்கிடுவான் குழந்தை''
தங்கச்சி சொல்கிறாள்.

''கல கலன்னு இருந்த
வீடே
வெரிச்சோடிக் கெடக்கும்
இவண் போய்விட்டால்..''
பழகியவர்கள்
தெருவாசிகள்
கருத்துச் சொல்கிறார்கள்.

புறப்படும் அன்று
சோக..சோகமாக
காட்சியளிக்கிறார்கள்
வழியனுப்ப வந்தவர்களும் கூட!

பார்த்துப் பார்த்து
தேம்புகிறாள்
பெரியக்கா மகள்.

''கிளம்பும் போது
அழுது
விட்டுத்தான் போவாய்''
பந்தயம் கட்டுகிறார் மாமி,
தேறுதல் சொன்ன என்னிடம்.

''நாளு வருசத்துக்குப் பிறகு
மூனு மாசம்
விடுப்புல வந்தான்
திரும்ப எப்ப வருவானோ?''
அப்பாவும்கண்கலங்குகிறார்.

துபாய்
போகாமல் இருந்துவிட்டாலும்
மகிழ்ச்சியடையப் போவதில்லை
எவரும்!
என்ன செய்ய
''எல்லாத்துக்கும் மேலவயிறுன்னு
ஒண்ணு இருக்கே!''