உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

நட்பாட்டம்

எனக்கு
நண்பர்களென்றால் உயிர்
எல்லாமும்
அவர்கள் தான்
அவர்களால் தான் எதுவும் சாத்தியம்
நம்புகிறேன்: நம்பிக்கொண்டிருக்கிறேன்.
ஆனால்
எவரெவர் நண்பர்களென்பதில்
கூடுதலாக குழம்பிப்போகிறேன்
இப்போதெல்லாம்.

காண்கையில்
கை குலுக்கி
மகிழ்ந்து சிரித்து செல்பவர்கள்
பின்னால்
என்ன பேசியிருப்பார்கள்
மனசுக்குள் கவலை சுமையாகிறது.
சிலர் பற்றி
சிலர் சொல்லக்கேட்ட பின்பு.

வேறு வழியில்லை
சந்திப்பில்
சிரித்து கை குலுக்குபவர்கள் எல்லோரையும்
நண்பர்கள்
என்றே சொல்லிக் கொள்கிறேன்.