உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

கோடை சில குறிப்புகள்

தார் சாலையில்
தாவித் தாவி நடக்கக் கண்டு
'சூடு தாங்காது புள்ள காலு' என
காலணி வாங்கித்தரும்
பெற்றோர்.

'வியர்வையோடு மூஞ்சிக் கழுவக் கூடாது' என
முந்தானைக் கொண்டு
முகம் துடைத்திடும்
துணைவி.

புரண்டு புரண்டுப் படுக்கக் கண்டு
'புழுக்கம் தாங்கல போல' என
மின் விசிறியை என் பக்கம் திருப்பும்
உடன்பிறப்புகள்

'என்னடா கொலுத்தர வெயிலிலே
நடந்துப் போற..' என
மிதிவண்டியில் சுமக்கும்
நண்பர்கள்

இப்படி யாருமில்லாத போது
வேறெதுவுமில்லை
கோடையை விட கொடுமை.