உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

நான் என்னும் நாண்

நான் என்னும் நாண்

நீ
என் மீது எப்போதும்
அக்கறையோடு இருப்பதாக
நம்புகிறேன்
இப்போதும்

அதனால்தான்
நீ
என் கால்களில் சுற்றிய
சங்கிலியை
கொலுசென
அறிமுகம் செய்தேன்.

நீ
எப்போதும்
என் வளர்ச்சியை விரும்புவதாக
நம்புகிறேன்
இப்போதும்

அதனால்தான்
நீ
என் கைகளில் மாட்டிய
விலங்குகளுக்கு
வளையலென
புதுப்பெயர் சூட்டிக்கொண்டேன்.

நீ
எப்போதும்
எனக்காக இயங்குவதாக
நம்புகிறேன்
இப்போதும்.

அதனால்தான்
நீ
என் செயல் தடுக்கயிட்ட
சிக்கல் முடிச்சுகளுக்கும்
தாலியென
சமாதானம் செய்துக்கொண்டேன்.

நீ
எப்போதும்
என் நினைவோடு இருப்பதாக
நம்புகிறேன்
இப்போதும்

அதனால்தான்
உன்
உள் மனசறிந்தும்
சேவையாற்ற
கடமைப்பட்டவளாக இருக்கிறேன்
நான்.

நீ
எனக்கு
முகமொன்று இருக்கிறதெனவும்
ஏற்க மறுக்கிறாய்.