உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

பிணமான பொழுதில்

பிணமான பொழுதில்


வாழும் வழியனைத்தையும்
தொலைத்து
போராடி மீட்டெடுக்கவும்
துணிவற்று
செத்துக் கிடந்தேன் நேற்று.

முகமும்
முகவரியும்
அற்றவன் நானைன்பதால்
என்னை
யாரென்று
அடையாளம் காணவும்
முடியாது திணறியது மனிதம்..

என்னை
புதைத்துவிட முயன்றவர்களுக்கு
தோல்வி
எனக்கென
ஓரடி மண்ணும்
உரிமையானதாக இல்லை.

எரித்து
அழிக்க முனைந்தவர்களுக்கும்
தோல்வி
இயற்கை வளங்களெதுவம்
எனக்கென்று இல்லை.

நாற்றமெடுக்க கிடக்கும்
எனக்கு
நேற்று வரை தெரியவில்லை
உரிமை
உடமை என்பதற்கான மதிப்பு.

கொத்தித் தின்ன
அந்நிய பருந்துகள் வருமென
காத்துக் கிடக்கிறேன்
உலகமயப்பட்ட பிணமாக.