உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

தனிமை

1
நம் சிரிப்புகளையெல்லாம்
அடமானம் வைத்து நெடுநாட்களாகிவிட்டன
நினைவிருக்கிறதா உனக்கு
நம் வீடுகளில்
''காந்தி'' சிரிக்க வேண்டுமென்று.

2
கட்டிலில் குடும்பம் நடத்துகிறார்கள்
எல்லோரும்

நாம்
கட்டிலோடு
குடும்பம் நடத்துகிறோம் சலனமற்று.

3
வாழ்க்கையில்
விடுமுறை நாட்கள் வரும் போகும்
அனைவருக்கும்

விடுமுறை நாட்களில் தான்
வந்து போகிறது
வாழ்க்கை
நமக்கு.

4
என்னை நீயும்
உன்னை நானும்
தீவிரமாக நேசிக்கத் தொடங்கிய
கணங்களிலிருந்து தொடங்கிவிட்டது
அவரவர் மீதான
அதிகபடியான கவனம்.