உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

பொருளிழந்து

வெளிநாடு தான்
வேலை நேரத்திற்கொன்றும் குறைவில்லை
விடிவதற்குள் தொடங்கி
எல்லோரும் ஓய்ந்தபின்னும் தொடரும்
நம்ம அம்மாக்களைப் போல.

பிறந்த குழந்தையிலிருந்து
வருகிற விருந்தினர் வரையிலும்
கவனிக்கவேண்டியிருக்கிறது எக்குறையுமின்றி!

அவர்களுக்கான தேவைகள் அனைத்தையும்
மறதியொன்றுமின்றி
முடித்துவிடுகிறேன்.

வேலையில் பிழையெதுவும் கண்டதில்லை
இன்று வரையிலும்
ஏனோ..
ஓராண்டு ஆகியும்
எனக்கும் குடும்பமிருக்கிறது
எனக்கும் தேவைகளிருக்கிறதென்பது
நினைவுக்கு வருவதேயில்லை முதலாளிக்கு.

வளைகுடாவெங்கும்
காற்றில் கலந்து
வான்வெளியில் மிதந்துக்கொண்டிருக்கின்றன
மானுட செவியேற்காத
அண்ணல் நபிகளாரின் சொல்
''உழைத்தவர்வியர்வை'
காயுமுன்ஊதியம் கொடுக்கவேண்டும்''