உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

கவிஞானாயிருத்தல் பற்றியதொரு கவிதை

நவீன யுக்திகளோடு
வாழ்வனுபவங்களின் பொருளுணர்த்தும் கவிதை
இவணுடையதென அடையாளப்பட
இச எழவுகள்
எதுவுமறியாவிட்டாலும் இளித்து நிற்கவேண்டும்,
அப்படியிருக்க அறியாதவன் நான்.

சொற்ப சொற்களுக்குள்
வாழ்வின் சூட்சுமம்
வைத்தெழுத தெரிந்தவனென அறிமுகமாக
எப்போதும் போதையிலிருக்கும்
நல்ல்ல்ல குடிகாரனாயிருக்க வேண்டும்,
இதுவும் எளிதானதல்லயெனக்கு.

அமரத்துவம் பெற்ற கவிதைகளை
அள்ளி அள்ளித் தருகிற ஞானகிறுக்கனென
பீடப் புகழுரைகள் பெற்றிட
மது அருந்துபவர்
ஒழுங்கீனர், தீண்டத்தகாதவர்
என்றொதுக்கி வைப்பவனாகவாவது இருக்கவேண்டும்,
குடி பழக்கமுடையவர் பலருண்டு
எனக்கு நெருக்கமானவர்களாக.

எந்த எல்லைக்குள்ளுமில்லாத என்னை
கவிஞனென்று சொல்லுகிற துணிவு எவனுக்குண்டு
என் நண்பர்களை தவிர