உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

தனிமை

ஆசைகள்
எண்ணங்கள்
தேவைகள்
எல்லாமும் குயில் முட்டைகளாய்
புலம்
பெயர்ந்தவனுக்கு.!
*

துபாய் நகரின்
ஏதாவதொரு தெருவில்
ஏதாவதொரு சாலையோரத்தில்
எப்பொதும்
ஏதாவதொரு தொழிலாளி
சுயநினைவற்று கிடக்கிறான்
போதையில்.
*

மாமியார் என்ன சொல்வாரோயென்கிற
அச்சம் அவளுக்கு
தொலைபேசி கட்டணமெவ்வளவு ஆகுமென்ற
கவலை கலந்த சிந்தனை எனக்கு
இவற்றுக்கிடையில்
என்ன பேசிவிடமுடியும் மகிழ்வாக.

இருந்தும்
அடிக்கடி நிகழ்கிறது இப்படியான பேச்சு.!
*

வேலைகளுக்கென
துபாய் வந்துவிட்ட பின்னும்
ஆழ்ந்த உறக்கத்திற்கிடையில்
மிரட்சியோடு விழித்தெழுகிறேன்.

பள்ளிக்கூடம்
செல்வதைப் போன்று கனவு கண்டு.!
#