உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

முகங்களற்ற முகாம்களில்

அன்று மின்னஞ்சலில்
வசைபாடி செய்தியனுப்பியவன்
என்றாவது கைகுலுக்கி சென்றிருக்கலாம்.

விவாதகளமொன்றில்
எதிராகவோ
ஆதரவாகவோ அணித்திரண்டவர்களிலொருவன்
மிக மிக அருகிலிருந்து
சிரித்து இரசித்திருக்கலாம்.

யாகூ தூதுவனிலோ
ஹாட்மைல் தூதுவனிலோ
குழைந்து குழைந்து நேரங்கடத்தியவன்
எதிர்பாராத தருணமொன்றில்
எதிரியாகி சண்டை வளர்த்திருக்கலாம்.

இணையத்தளங்களில்
நான் எதிர்க்கிற கருத்துக்கு ஆதரவாகவோ
நான் நேசிக்கிற கொள்கைக்கு எதிராகவோ
கருத்துகளெழுதி சீண்டியவன்
என்னோடு இணைந்தே இயங்கியிருக்கலாம்.

எதுவும் நிச்சயமற்றதாகி விட்டாலும்
குழப்பங்களால் குழைத்து கட்டப்படுகிறதிங்கு
நம்பிக்கைக் கோட்டை.!