உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

கேட்காததும் சொல்லாததும்

''துபாய் போனா நல்லா சம்பாதிக்கலாம்''
அடிக்கடி
வீடு வந்து சொன்னான்.

புதுநகர் மூனுமாடி வீட்டுக்காரனையும்
பக்கத்து தெரு புது வீட்டுக்காரனையும்
ஆதாரத்துக்கு
காட்டிவைத்தான்.

''இங்க என்னதான் பண்றது
வெளிநாட்டு பக்கம் போனா நாளுகாசு பாக்கலாம்''
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஆசைதான்.

என்ன விசா
என்ன வெலை
விச்சாரித்த போதெல்லாம் சொன்னான்
''சொந்த விசா...
புடிச்ச வேலைல சேரவேண்டியதுதான்.''

அனைத்தையும் சொன்ன அவனிடம்
நானும் கேட்கவில்லை
கடைசிவரை அவனும் சொல்லவில்லை
''துபாயில் வேலை தேடுவது எப்படியென்று."