“உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.” – ரசூல் கம்ஸதோவ்
தனிமை
தன்னந்தனியே
உழைத்து பொருளீட்டி
குடும்பத்தை கரை சேர்த்திட முடியுமென
துணிவுகளை
உடுத்தி கரை கடந்து வந்தவளை
தனிமையில்
துணிகளை அவிழ்த்து
ருசிக்கத் துடிக்கும்
முதலாளித்துவம்.
*
உடல்பாதிப்பு
மிகச்சிறியதென்றாலும்
உடனடியாக சரியாகிவிடுவதில்லை
எல்லா வசதிகளோடும் கூடிய
மருத்துவ கவனிப்பிருந்தும்.
ஆறுதலும்
தேற்றுதலும்
நிரம்பிவழியும் உன் விசாரிப்பின்றி.
*
பெரிய வித்தியாசமெதுவுமில்லை
குடும்பதோடு
நல்ல உணவுக்கு
வசதியற்று வாழ்வதற்கும்.
நல்ல வசதிவாய்ப்பிற்காக
தனித்து
குடும்பமற்று கிடப்பதற்கும்.
*