உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

கையசைப்பு

எல்லோரையும் போலவே
கெஞ்சிக்
கெஞ்சிக் கேட்டுப் பெற்றேன்
ஒரு
கையசைப்பு.

இப்படியாக
வெளியூர் புறப்படும்போதெல்லாம்
விரும்பிப்
பெறவேண்டியிருக்கிறது பிள்ளைகளிடம்.

கிராமங்களைக் கடந்து செல்கிற
பேருந்து பயணத்தினூடே
ஏரிக்கரையிலிருந்து வேகமாக ஓடிவந்து
கையசைக்கிறான்
ஆடு
மேய்துக்கொண்டிருக்கும் சிறுவன்
பதில்
கையசைப்பு
கிடைக்குமென்ற நிச்சயமற்று.

அதே
அப்பழுக்கற்ற அன்போடு
கையசைக்க முடிவதில்லை
எவராலும்.