உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

என் ஆசை மகளுக்கு

மடலெழுதி மட்டுமே மகிழ்ந்துக்கொள்ளும்
நம் வாழ்வில் சோகம் சூழ்ந்து
கும்மியடிக்கின்றன.

நாலு பேர் மதிக்க
வாழ்வதற்கென்று தொடங்கியது
துபாய் பயணம்.

வெளிநாட்டு
மாப்பிள்ளையென சொல்லிக்கொள்ள
நுழைமதி காலம் மட்டுமல்ல
இத்தனிமை வாழ்வும் நீண்டது.

இதிலிருந்து மீள்வதற்கான வழியறியுமுன்
உன் கல்வி
எதிர்காலமென கவலைகள் சூழ
தொர்ந்துக்கொண்டிருக்கிறது இன்னும்.

எங்களுக்கான காலம் தொடங்குவதற்குள்
உங்கள் காலங்களின் மிரட்டலில்
விழி பிதுங்குகிறேன்
நள்ளிரவு
தூக்கத்திலிருந்து விழித்த குழந்தை போல.

நாலுபேர் எதுவும் சொல்வதற்குள்
திரும்பி வந்துவிடு என்கிறாய்
நீ.

விரைவில் வருகிறேன்
அதுவரையெனக்கு
எதையாவது எழுதிக்கொண்டிரு
என்ன இருக்கிறது இங்கெனக்கு
உன் கடிதங்களையும்
சில கவிதை நூல்களையும் தவிர.