உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

மறுபிரசவம்

தாருமாறாய் திட்டித் தீர்த்தாய்
நடுசாலையில் வைத்து
என்னை,
சொன்ன வேலையை செய்யவில்லையென.

இரவு நெடுநேரமாகியும் காத்திருந்தாய்
வாசலிலேயே
நான் வரும்வரை எனக்காக.

'புள்ளய திட்டிவிட்டேன்..
யார் மேலயோ உள்ள கோவத்தில்,
ராத்திரி
புள்ள வூட்டுக்கு வந்தபிறகுதான்
உசுரே வந்துச்சி எனக்கு'
சொல்லிக்கொண்டிருந்தாய்
பக்கத்து வீட்டு ஆயாவிடம்.

அம்மா
நீ கோபப்படும் போதெல்லாம்
மீண்டும்.. மீண்டும்
பிறக்கிறேன்
உனக்கு மகனாக நான்.