உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

தெரியாமலே

இரவு
கடைசியாக வரும் பேருந்தில் வருவார்
வேலை முடிந்து தினமும்
அந்நேரம்
தூங்கிப்போயிருப்போம் நாங்கள்.

விடியுமுன்
வெளியேறியிருப்பார் வேலைக்கென
முதல் பேருந்தில்
போகும் போதும் பார்க்கமுடிவதில்லை
எங்களால்.

ஒழுகி
ஒழுகி
ஒழுகி கறைப்பட்டிருக்கும்
எச்சிலோடு இனிப்பும்
தலையணை முழுக்க.!

எங்களோடு பேசினாராம் சாப்பிட்டாராம்
காலை
எரும்புகள் சொல்லி தெரியும்.

எங்களுக்கேத் தெரியாமல்
எங்களோடு
வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்
அப்பா.!