அம்மாவுக்கு
நினைவிருக்குமா இன்று
பெரம்பலூருக்கு புறப்பட
பள்ளி படிப்புக்கென்று
அழுதுக்கொண்டே வழியனுப்பியதும்.
மௌலானா பள்ளி
எதிர் பெட்டிக்கடையில்
கடலை உண்டை வாங்கித்தந்து
கண்ணை கசக்கி
பிரிவின் சோகம்
பிள்ளை எனக்கு தெரியாதிருக்க
துப்பட்டியால் முகத்தை மூடிக்கொண்டதும்.
கல்வி சுற்றுலா என
தூரத்து ஊருக்குப் பயணப்பட
கடை உணவு ஆகாதென
கட்டிசோறு கட்டித்தந்து
கண் கலங்கியபடி கையசைத்ததும்.
அறிவுக்கண்ணும்-முருகப்பனும்
எழுதிய மடலில் தான்
அறிந்து கொண்டேன்.
'என் புள்ளைய பிரிந்து
ஒரு நிமிடம் இருக்கமாட்டேன்
இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன' என
அம்மா அழுத செய்தி.
அம்மா சொல்வதுண்டு;
'என்னடா பொட்டச்சி மாதிரி
அழுவுர பழக்கம்.'
தாய் பாசத்துக்காக ஏங்கும் பிள்ளையில்
ஆண் பெண் வித்தியாசம் உண்டா.
நான்
அழுதிருக்கிறேன் - அழுவேன்.