உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

அறிமுகம்

மனசாட்சிக்கு
மண்டியிடுகிற நேரம்
'விலங்கினின்று வித்தியாசப்படுத்தும்'
அந்த அறிமுகம் நிகழ்கிறது.

அவனுக்கு
'மொட்டு வெடித்து மலராகும் ஓசை'
இடையூரென்பதால்- உணரமுடிகிறது.

பாம்பு வாயில் மாட்டிய
தவளையின் ஓலம் மட்டுமல்ல:
தவளை நாவில் சிக்கிய
பூச்சிகளின் ஒப்பாரியையும்.

ஆதிக்க வெறியில் எரிந்து சாம்பலான
தாழ்த்தப்பட்டவனின் உணர்வாகி,
கரசேவைக் கடப்பாறையால்
கொலையுண்ட
சிறுபாண்மைகளின் உரிமைகளாகி
பழிவாங்கலுக்குப் பலியாகி
வெடித்துச்சிதறிய
பாமரனின் உயிராகி
அறிமுகமானேன்.