உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

எங்க வீடு

வெயிலையும் குளிரையும்
ஒண்ணா நெனைக்கச் சொல்லும்
கருப்பஞ் செத்த கூரை.

படாச்சி நாயக்கர் பறையர்
வித்தியாசமில்லாம
ஒன்றிணைத்த பெரிய திண்ணை.

அத்தா
பெட்டிக்கடை வச்சிருந்த
முன்பக்க சின்ன அறை
அம்மா
இட்டிலி சுட்டுவித்த
பின்வாசல் அடுப்பு

அவசரத்துக்கு அடுப்புக்கும்
அக்கா தங்கை தலைக்கும்
உதவிய சின்ன தோட்டம்.

விடியற்காலை
உறக்கம் கலைக்கும்
உழவுமாடுகளின் லாட சத்தம்

வாசலில்
காயப்போட்ட தானியம்
'எனக்குதான் சொந்தம்'- என்ற
பக்கத்து வீட்டு ஆட்டின்
உரிமைப்போர்.

கூரையின் உச்சியில்
நின்று அணிலும்
முள்வேலியின் நுனியில்
நின்று ஓணானும்
நட்புக்கொண்டு பரிசளித்த
சிரிப்புகள்.

'ஊரையும் சேரியையும்
சேக்கற எடம்தான் சாயபு வூடு'
என்ற அடையாளம்
இப்போதும்
அப்படியே இருக்குமா?
உடன்பிறந்தாளுக்கு
வாழ்க்கை வாங்க விலையாகிவிட்ட
எங்க
நெய்வினை வீட்டில்.
*