நபிவழியில்
வளர்ந்திருக்கலாமென்று
நினைத்துக் கொள்பவர்களுமுண்டு
நான் முஸ்லிமாகயிருப்பதால்
அப்படியெதுவும் அப்போது தோன்றியதில்லை
எனக்கு.
காதல் தோல்வியோயென
சந்தேகித்தவர்களில்
கேட்டுவிட்டவர்களும் உண்டு
காதல் கவிதைகள் எழுதியிருக்கிறேனென்பதால்
சோம்பேறித்தனம்
காரணமென்று சொன்னாலும்
நம்பியவர்கள் தான் நம்பினர்.
திருமண பேச்சின் போது
'தாடியோடு
பெண் ரசிக்கமாட்டாள் மழித்துவிடு'
நண்பர்களின் ஆலோசனைகளையும்
தெளிவான
காரணமெதுவுமற்று
மறுத்திருக்கிறேன்.
இன்னும்
இருக்கத்தான் செய்கிறதென் தாடி
மனைவி
ரசிக்கிறாள்
என்பது இப்போதைய காரணமாகினாலும்
நாளை
இதுவே என் அடையாளமென்பது
காரணமாகலாம்.