உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

வெள்ளிக்கூடல்

மத்தியானப் பொழுதில்
நிறுவனத்தின் ஊர்திகளில்
திணிக்கப்படுகிறதெங்கள்
எதிர்பார்ப்பு

சாலையின் அசுரநகர்வில்
வேகமாக பயணிக்கிறதெங்கள்
ஆர்வம்

நெரிசலுக்கிடையேயான நிறுத்தமொன்றில்
திபுதிபுவென வெளியேறுகிறதெங்கள்
உற்சாகம்

காற்று திணரும்
மனிதக்காடுகளில்
நுழைந்து
நகர்ந்து
முட்டிமோதி வெளியேறுகையில்
இல்லாமலாகிறதெங்கள்
ஏக்கம்

மின்கம்பம்
கண்விழிக்கும் பொழுதில்
நிறுவன ஊர்திகள்
மீண்டும் அள்ளிச்செல்கிறதெங்கள்
கூடுகளை!