உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

கடிதம் பற்றி

சில மாதங்களைக் கடந்த பின்னும்
கேட்கிறாள்
'அந்த கடிதம் கிடைச்சிச்சாங்க?'
அவள்
எதிர்பார்க்கும் விடை
என்னிடமில்லை இப்போதும்.

அக்கடிதத்தின் முக்கியத்துவத்தையும்
இழப்பின் வலியையும்
எப்படியுணர்வார்கள் அவர்கள்
எப்படியும்
என்னிடம்
சேர்த்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை
அவளுக்கிருந்திருக்கலாம்.

காப்பாற்றும்
கடமையுணர்வு
இந்திய அஞ்சல் துறைக்கோ
அமீரக அஞ்சல் துறைக்கோ
இல்லாமல் போனதற்கு
நானென்ன செய்துவிட முடியும்

கவிதை ஒன்று எழுதலாம்
காணாமல் போன கடிதம் பற்றி.
*