உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

கவனிப்பின் கணம்

கவனிப்பின் கணம்

எப்போதாவது தான் அமைகிறது
பிரச்சினையில்லாமல் பயணமாகிற சூழல்
ஓய்வற்ற ஓய்வாகவே
ஒவ்வொரு பயணமும்.

மகிழ்ந்த முகத்தோடு
சுடுநீர்
சுவைகுறையாத தேனீர்
உணவுகளில்
'பிள்ளைக்கு பிடித்ததென' அம்மா
'அவருக்கு விருப்பமென' துணைவி
'கூடப்பொறந்தான்
கூடுதலா சாப்பிடுவானென' உடன்பிறந்தார்
வகைவகையாக பரிமாறுகிறார்கள்
எப்படியும்
திரும்பிவிடுவேனென்ற நம்பிக்கையில்

கவனிப்பாரெவருமற்று கிடக்கும்
அப்பாவைக் காண்கையில்
மீண்டும் உறுதியாகிறது
தூரப்பயணம்.
*