உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

இருப்பு

நட்சத்திரங்களே
கீழே இறங்கி வாருங்கள்
எங்களோடு

சிறப்பு விருந்தினராகவோ
முக்கிய பேச்சாளராகவோ
வருகை தந்திருக்கலாம் நீங்கள்
எங்களுக்காகவும்
வந்திருப்பதாக சொல்லிக்கொள்கிறீர்கள்.

ஆகவே
எங்களோடு வாருங்கள்

இது எங்கள் குளியலறை என்கிறேன்
உள்ளே நுழையவும் அஞ்சுகிறீகள்
காற்றோட்டமில்லாத மிகச் சிறியதென்று

இங்கே எங்கள் கழிவறை என்கிறேன்
மூக்கைப் பிடித்தபடி எட்டிப்பார்க்கிறீர்கள்
அசுத்த கிடங்காயிருக்கிறதென்று

இங்கு தான்
எங்களுக்கான உணவு தயாராகிறது என்கிறேன்
வாயை மூட முயலுகிறீர்கள்
வாந்தி வரும்போலிருக்கிறதென்று

இதுதான் எங்கள் அறை என்று காட்டுகிறேன்
முகம்சுளிக்கிறீர்கள்
'இவ்வளவு சிறிய அறையில்
இத்தனை பேரா' என்று.

நாடு எதுவானால் என்ன
தொழிலாளர் குடியிருப்புகள்
உலகமெங்கும் இப்படிதான்.

இப்போது புறப்படுங்கள்
பேசுங்கள்
துபாயில் தமிழர்கள்
வசதியாக வாழ்கிறார்களென்று.