உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

துணையிழந்தவளின் துயரம்

துணையிழந்தவளின் துயரம்

அழுது வடிந்து
மூக்கு சிந்தி முந்தானை நனைக்கிற
நெடுந்தொடர்களற்ற பொழுதுகளில்
பழி சொல்லி சிரிக்க
வசைமொழிகளால் வதை செய்ய
கேளிகளாலும்
கிண்டல்களாலும்
கீறி கிழித்து
ரணமாக்கி மகிழ
யாருடைய இதயமாவது
தேவையாகதான் இருக்கிறது
பலருக்கு.

அந்த இதயம்
வேலை தேடி
வெளிநாடு போனவனின்
மனைவியினுடையதென்றால்
கூடுதல் சுகம்
அவர்களுக்கு.