உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர் மறைவு

தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர் மறைவு

தமிழ்நாட்டு அறிஞர்களால் தமிழ்நூற்கடல் என மதிக்கப்பெற்ற தி.வே.கோபாலையர் அவர்கள் 01.04.2007 மாலை ஐந்து மணிக்கு
அவர்தம்மகளாரின் இல்லத்தில்(திருச்சி,திருவரங்கம்) இயற்கை எய்தினார்.சிறிதுகாலம் உடல்நலம் குன்றியிருந்த அவரை
மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.மருத்துவம் பயனின்றி தம் 82 ஆம்வயதில் இயற்கை எய்தினார்.திருவையாறு கல்லூரி,
திருப்பனந்தாள் கல்லூரி,புதுவை பிரஞ்ச் நிறுவனம் முதலானவற்றில் பணிபுரிந்தவர்.இவரிடம் கங்விபயின்றவர்கள் உலகம்
முழுவதும் பணிபுரிகின்றனர்.தமிழ்,பிரஞ்ச்,சமற்கிருதம்,ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர்.இலக்கணம்,இலக்கியம்,
சமயநூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களில் இவருக்கு ஒப்புமை காட்டமுடியாதபடி புலமையுடையவர்.இவர்தம் நினைவாற்றல்
அனைவராலும் வியக்கத்தக்க ஒன்றாக இருந்தது.தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் வழியாக இவர் பதிப்பித்த
நூல்கள் என்றும் நின்று நிலவும்.அயல்நாட்டு மாணவர்கள் பலருக்கு இவர் தமிழ்பயிற்றுவித்த பெருமைக்கு உரியவர்.
இராமாயணத்திலும்,சீவகசிந்தாமணியிலும் கோபாலையருக்குத் தனித்த ஈடுபாடு உண்டு.
தமிழ்ப்பேரறிஞரை,பதிப்பாசிரியரை,உரையாசிரியரை,சொற்பொழிவாளரை, தமிழை மிகச்சிறப்பாகப் பயிற்றுவிக்கும்
பேராசிரியரை இத்தமிழுலகம் இழந்துள்ளது. இவர்தம் இழப்பு ஈடுசெய்யமுடியாத ஒன்றாகும்.