உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

மழை திறந்த சன்னல்கள்

மழை திறந்த சன்னல்கள்
பழநிபாரதி

காதல் நம் அம்மாக்களின் அம்மா.

சூரியனும் சந்திரனும் அவளது இரண்டு மார்பகங்கள்.

நம்மையெல்லாம் தூங்கவைக்க அவள் கட்டிவிட்டிருக்கிற ராட்சத தொட்டில்தான் இந்த பூமி.

காற்று அவள் தாலாட்டு.

அவள் நம்மையெல்லாம் மழையால் குளிப்பாட்டி, மலர்களால் தலைதுவட்டி, மரங்களைக் கிளுகிளுப்பைகளாய் ஆட்டி ரசிக்க வைக்கிறாள்; பசிக்க வைக்கிறாள்; ருசிக்க வைக்கிறாள்.

அவள் பாலூட்டிக் கொண்டே இருக்கிறாள்..
முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறாள்...
மூச்சு முட்டுகிறது என்று அவளிடமிருந்து நாம்தான் நம்மை ஒரு நிமிடம் விடுவித்துக்கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்; அவளுக்கு அது சலிப்பதே இல்லை.

காதலின் அந்தத் தாய்க்குணங்களையும் பால் மணக்கும் மொழியில் கவிதைளாக்கி இருக்கிறார் இசாக்.

“பிற்பகல் பொழுதில்
பெய்து கொண்டிருந்த மழையை
ரசிக்க
சன்னல் திறந்தேன்
நீயும் சன்னல் திறந்து நிற்கிறாய்
நான்
என்ன செய்ய
சொல்”
இந்த வரிகளில் காதல் அவர்களைக் கதவுகள் திறந்து அழைத்து வருகிறது. வெட்டவெளியில் அவர்களை மழையின் குழந்தைகளாக ஆக்குகிறது. மல்லிகை மணக்கும் மெல்லிய இருட்டில் மயக்குகிறது. ஒருவருக்கொருவர் மழையாகிற ஈர ரகசியத்தை அவர்களுக்குள் ஊற்றி விடுகிறது.

“எண்ணெய் தேசத்தில்
பணியாற்றுவதென்னவோ நீ
என்ன
கொடுமை
அணைக்க முடியா நெருப்பாய்
கொளுந்துவிட்டு
எரிந்துகொண்டிருக்கிறேன் நான்”
என்று தகிக்கிற இசாக்கின் காதலிதான் இந்தக் கவிதைகளில் என்னை அதிகம் கவர்ந்தவர். காதலி எப்போதும் கிசுகிசுத்துப் பேச வேண்டியதில்லை; உரக்கவும் பேசவேண்டும்.

இசாக்கின் காதலி வாழ்வில் காதலைப் பார்க்காமல் வாழ்வையே காதலாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
“அடேய்
உன்னை
பணம் பூக்கிற செடியாகவும்
என்னை
குழந்தை காய்க்கிற மரமாகவும்
சமைத்துக்கொண்டிருக்கிறது சமுதாயம்
ஆனால்
மனிதர்களாகவே
வாழத்தூண்டுகிறது காதல்”

இசாக்கின் காதலி, இசாக்கின் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; இசாக்குக்கும் தாயாகி அவரை நேர்ப்படுத்தி நிற்கிற அழகு அது. பாரதியின் கண்ணாம்மாவைப் போல கபடங்கள் அற்ற வெள்ளைக் காதலி போலும் அவர்.

“தனித்திருக்கிறாய் என்பதறிந்து
தொலைபேசியில்
அழைத்தேனென்கிறாயே
அடேய்
நீதான்
எப்போதும் என்னோடு இருக்கிறாயே”
என்று காதலை தனக்குள் வைத்து வாழும் பணிவும்
“அடேய்
அந்த இரவுகளில்
அவிழ்த்தெறிந்த கூச்சங்களெல்லாம்
நீ
இல்லாத இரவுகளில்
கேலியாக பார்க்கின்றன”
என்று பெண்மையின் தேவையை கேட்டு வாங்கும் துணிவும் அவருக்குள் சமமாக இருக்கின்றன.

இப்படி அனைத்திலுமான ஆண் பெண் சமத்துவப் பதிவுகள்தாம் இன்றைய காதல் கவிதைகளில் இசாக்கின் கவிதைகளைத் தனித்து அடையாளப்படுத்துகின்றன. இருவரும் சேர்ந்து சிரிப்பது எவ்வளவு சுகமோ, அப்படியே சேர்ந்து அழுவதும் சுகமென்பதை இந்தக் கவிதைகள் காதலர்களுக்கு உணர்த்தும்.

“தூர தேசத்துப் பயணம் பற்றி
சொல்ல வந்த
எனக்கு
எதிர்பாராத பரிசாக
இறுக அணைத்து
ஒரு ச்ச்ச் கொடுத்தாய்
எவருமில்லையென

அமைதியாக பார்த்து கொண்டிருந்த
கிளி
பிறகெதாவது சொன்னதா.?”
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் நமது ‘முத்தொள்ளாயிர’த்தில் பார்த்த கிளி, அதே அழகோடு சங்ககாலத்தைத் தாண்டி இந்தக் காலத்திற்குள் வந்து இசாக்கின் கவிதையில் உட்கார்ந்திருக்கிறது.

நமது பண்பாட்டில்... மொழியில் இந்தத் தொடர்ச்சி ஓர் அழகு. இந்தக் கிளியின் கண்கள் நமக்குள் காதலை விதைக்கிறது. படபடக்கும் அதன் சிறகுகள் இதயத்துக்குள் வானத்தை விரிக்கிறது.

என்றென்றும் அன்புடன்
பழநிபாரதி