உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

சிறகற்ற பறவை

சிறகற்ற பறவை

உடலொன்று
கட்டிலில் கிடக்கும் எதுவுமற்று
இரவுகளில்

நாட்டை
வீட்டை
உறவுகளைத் தேடி
பறந்துப் பறந்து
சோர்ந்து
மீண்டும் கூடுசேரும் தருணம்
சடங்காக
எப்போதும் போல
விடியும் பொழுது.

தனித்து
வாழ துணிந்த அன்றே தொடங்கியது
நேற்றும்
இன்றும் தொடர்கிறது
நாளையும் தொடரக்கூடும்

இந்த சிறகற்ற பறவையின்
பயணமற்ற பயணம்.