உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

இசாக்கின் குறும்படம் "ஒரு குடியின் பயணம்"

இசாக்கின் குறும்படம் "ஒரு குடியின் பயணம்"
----------------------------------------------->> புதியமாதவி, மும்பை.

"போதை மனிதனின் இயல்பு குணங்களுக்கு எதிரானது" என்ற கருத்துமையத்தைச்
சுற்றிப் பயணிக்கிறது இளவல் இசாக்கின் குடியின் பயணம்.

குழந்தை இறந்துவிட்டது என்ற உண்மையைச் சொன்னால்
பயணம் செய்ய முடியாது என்பதால் இறந்துப்போன குழந்தையைத் தோளில் சுமந்து
கொண்டு பொங்கிவரும் அழுகையை, விம்மலை அடக்கிக்கொண்டு தனியாக
பயணம் செய்யும் செல்வியின் மவுனமும் உடல்மொழியும் தான் குறும்படத்தின்
வெற்றி. இறங்க வேண்டிய தன் ஊர் வந்தவுடன் அது கூட அறியாமல் அமர்ந்திருக்கிறாள்.
நடத்துநர் சொல்லவும் தன் ஊரில் இறங்கி பேருந்து அங்கிருந்து புறப்படும்வரை
அடைப்பட்டுக்கிடந்த காற்றாய் அவள் விம்மல்.. பேருந்து கிளம்பவும் அவளிடமிருந்து
வெடித்துக் கிளம்புகிறது...


'குடிகாரக் கொடுமைக்காரன்
கொள்ளையிலே போவாமா..
குடும்பத்தைப் போக்கினியே
குழந்தையும் காக்கிலியே..

ஒப்பாரியாய் அவள் சோகம் அந்த ஊரெங்கும் எதிரொலிக்கிறது.

செல்வியாக நடித்திருப்பவர் உடை, உடல்மொழியின் யதார்த்தம் கதைக்கு வலு சேர்க்கிறது.

சில கேள்விகள் :

செல்வியின் குழந்தை இறந்து போனதற்கு செல்வியின் கணவனின் குடி தான் காரணமா?
இந்தக் கேள்வி குடியின் பயணம் பார்வையாளனுக்குள் எழுதப்படும் கேள்வி.

"கதை ஆரம்பத்திலேயே "குடிகாரப் பாவி குடிகுடினு குடிச்சிட்டு கிடக்கானோ.. பிள்ளைய
ஆசுபத்ரிக்கு கொண்டுட்டு போகனுன்மு சொன்னேனே.. நாலு நாளா இப்படித்தான் பிள்ளை
அழுதுக்கிட்டு கிடக்கு" என்று சொல்கிறாள் செல்வி.
நான்கு நாட்களாக அழுதுக்கொண்டிருக்கும் உடல்நலமில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு
அழைத்துச்செல்ல அவளுக்கு ஏன் அவள் கணவனின் துணை தேவைப்படுகிறது?
அதுவும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்பவள் 4 நாட்களாக தன் கணவனின்
துணைக்காக காத்திருப்பது சாத்தியமா?
இன்றைக்கும் நம் கிராமபுறங்களில் வயதானப் பெண்கள் கூட தனியாக 'மதுரைக்கு வழி
வாயிலே' என்பதற்கேற்ப கேட்டு கேட்டே பேருந்தில் ஏறி இறங்கி பயணம் செய்து
மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவரைப் பார்த்து மருந்து வாங்கி வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். எந்தக் கிராமத்துப் பெண்ணும் தன் கணவனின்
துணைக்காக காத்திருந்தால் குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் குழந்தையை மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்வது சாத்தியப்படாது.

இனி, குடியின் பயணம் ஏன் மனிதனின் இயல்பு குணங்களுக்கு எதிரானது என்று
நினைக்கிறோம்? இக்கேள்வி காலம் காலமாய் தொடரும் கேள்வி.

"சிறிய கட் பெறினே எமக்கீயும் மன்னே
பெரிய கட் பெறினே யாம் பாட தான்
மகிழ்ந்துண்ணும் மன்னே

என்று பகிர்ந்து குடித்து மகிழ்ந்து வாழ்ந்தவன் தமிழந்தானே!
குடிக்காதே என்றும் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர் என்றும்
கள்ளுண்ணாமை பாடிய திருவள்ளுவருக்கு முன்பும் குடி இருந்தது,
திருவள்ளுவருக்குப் பின்னும் குடியின் பயணம் தொடர்கிறது.
இனியும் தொடரத்தான் செய்யும்.
மகிழ்ந்து கள்ளுண்டு வாழ்க்கையை அனுபவித்தவன் தமிழன். இன்று
பெற்ற பிள்ளை உடல்நலமின்றி அழ மனைவியையும் மகவையும்
நடுரோட்டில் விட்டுவிட்டு போதை ஏற்றிக்கொள்ள சாலையோரத்து
ஒயின்ஷாப்புக்குள் நுழைகிறான். பக்கத்தில் டாஸ்மார்க் மதுபானக் கடை,
பார்வசதியுடன். டாஸ்மார்க்கில் நுழைந்திருந்தால் குடிபோதையில்
குடிகளை வழிநடத்தும் அரசாங்கத்தின் குடிபயணத்தையும் குறிப்பாக
உணர்த்தியிருக்க முடியும்.
'கள்ளுண்டு கவராடும் இறை முறை பிழைத்த அரசும்' என்றான் கம்பனும்.
செல்வியின் கணவன் ஒயின்ஷாப்புக்குப் போவதாக காட்டியதால்
அந்த வாய்ப்பை இழக்கிறார் இசாக்.

கள்ளுண்ட தமிழன் தெருவில் போதையில் தன்னை மறந்து கிடந்தானா?
தமிழ்நாட்டின் வெட்ப நிலைக்கு பதனீரும் கள்ளும் இன்றைய மதுபானம் போல
கெடுதல் விளைவித்ததா? இந்தக் கேள்விகள் இன்று எழுகின்றன.
கள்ளிறக்குபவனை, பனை ஏறுகிறவனை குடியில் தாழ்ந்தவனாக்கிய
சமுதாயம் மல்லையாக்களை உருவாக்கியது.
மல்லையாக்களால் பெருமை என்றும் உலகத்தின் பெரும்பணக்காரருள் அவரும் ஒருவர்
என்றும் சொல்லிக்கொள்கிறது.
"குடிசைத் தொழிலாக இருந்த கள்ளிறக்குதல் முடிந்துவிட்டது. வாகன வசதிகளும்
அடியாட்களும் பெரும் முதலீடுகளும் கொண்ட பெருந்தொழில் இன்றைய
மது உற்பத்தி . கோடை போடுவதற்கு வேலம் பட்டை, இழுவிய கருப்பட்டி அல்லது சர்க்கரையின்
உபயோகங்கள் குறைந்து விட்டன. போதை ஊட்டுகிற எல்லா நஞ்சுகளும் அழுகிய சேதமான
பழவகைகளும்தான் இப்போது கோடைத் தண்ணீருக்குக் கச்சாப்பொருள். உட்கொள்ளத்
தகுந்த ஈதைல் அல்கஹால் வந்தாலும் சரி, பெயிண்ட் தயாரிக்கிற பிணம் ஊற வைக்கிற
மெதைல் அல்கஹால் வந்தாலும் சரி. எல்லாம் விற்றுப் போகும். எவன் செத்தாலும் சரி,
எவன் கண்கள் அவிந்தாலும் சரி, எவள் மலடாகிப் போனாலும் சரி, அரசுக்குக் கவலையில்லை"
(நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று : நாஞ்சில் நாடன் கட்டுரை) என்று நாஞ்சில் நாடன்
சொல்லியிருப்பதும் அது சார்ந்த கேள்விகளும் "ஒரு குடியின் பயண"த்துடன் சேர்ந்தே
பயணிக்கும் கேள்விகள்.
உடையலங்காரம் , காட்சி, உரையாடல்களின் யதார்த்தம் ஒரு குடியின் பயணத்தை
அந்நியப்படுத்தாமல் புஞ்சைக் காட்டின் கருவேல முள் வேலிகளுக்கு
நடுவில் வாழும் நம் மக்களின் வாழ்க்கையை அப்படியே காட்சிபடுத்தியுள்ளது.
தமிழ் அலையின் வெளியீடாக வந்திருக்கும் குறும்படத்தின் பயணத்திற்கு
வாழ்த்துகள்.
தன் தேடலை தன் மொழியை வசனங்களுக்கு அப்பாற்பட்ட மவுனத்தில்
சொல்ல முயற்சி செய்திருக்கும் இசாக்கிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம்.
வாழ்த்துகளுடன்,

புதியமாதவி.