உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

தனிமை

வயிற்றுப் பிழைப்பிற்கான பயணத்தில்
என்
இருப்புகள் அழிந்தொழிவது
மகிழ்ச்சிக்குறியதாயிருக்கிறது
சிலருக்கு.

சூரியச்சூட்டில் வெந்துதிரும்
பேரீச்சம்பழம்
சுவைமிகுந்திருப்பது போல.
*

மிகுந்த பலத்துடன் எழும்
புயல்காற்றின்
தாக்குதலுக்கேற்றார் போல
மாற்றமடையும்
பாலைவன மணல் மேடுகளாய்
அலைகழிக்கப்படுகிறது
உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும்
என் வாழ்வு