உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

நானற்ற நான்

நானற்ற நான்


கடுமையான உழைப்பாளி
மிகக் குறைவான வருமானம்
இருந்தும்
கலையார்வம்
அதுவும் நிழற்படமெடுக்கும்
ஆர்வம் அதிகம்
நண்பர் இபுறாகிமுக்கு

துபாயின்
ஓய்வற்ற பணிகளுக்கிடையே
நண்பர்களை
அழகாக்கி காட்டுவதில்
நாட்டம் எப்படி வந்ததென்று தெரியவில்லை
அவருக்கு

விரும்பித் தேடி
வீடு வரை வந்து
விதவிதமாக படமெடுத்து தந்திருக்கிறார்
என்னையும்.

‘நல்லா தான் இருக்கே’ என்று
கிண்டலாக சிரிப்பதுண்டு
நண்பர்கள்
இவர் என்னையெடுத்த
நிழற்படம் பார்த்து.

அவர் எடுத்த படமொன்று
என் கவிதைத் தொகுப்பின்
அட்டையில் அமர்ந்துவிட
‘இசாக் படம்தான்
ஆனால்
இசாக் தான்
என்று நம்ப இயலவில்லை’ என
நண்பர் கடற்கரய்
வெளியில் சொன்னது
பலரின் மனசுக்குள் மறைந்திருக்கலாம்.

இப்படி தான்
அடையாளப்படுகிறேன் பலரிடம்
நானற்ற நானாக
தமிழர்கள்
பேசும்
தமிழற்ற தமிழைப் போல.