உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

நான்காம் ஆண்டில் கீற்று

தமிழ் இணைய உலகில் மரியாதைக்குரிய செயல் ஒன்று உண்டு என்றால் அது கீற்று தளம் தான். அம்மரியாதைக்குரிய செயலுக்கு அகவை நான்கு ஆகிறது. கீற்று தளத்தின் பணிகள் விரிவடையவும் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன். தோழர் இரமேசும் அவரின் தோழர்களும் தொடர்ந்து ஊக்கத்தோடு தமிழ்ப்பணியாற்ற மீண்டும் எனது வாழ்த்துகள்.
கீற்று தள ஆசிரியர் குழுவின் மடல் கீழே இணைத்துள்ளேன்.. நல்லவர்களின் பார்வைக்கு.
அன்புடன்
இசாக்

நான்காம் ஆண்டில் கீற்று
http://keetru.com/

மாற்றுக் கருத்துக்களுக்கான இடம் தமிழ் இணைய தளங்களில் குறைவாக இருந்தபோது, அதை ஈடுகட்டும் சிறுமுயற்சியாகத் தான் கீற்று இணையதளத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினோம். எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வனும், ஆதவன் தீட்சண்யாவும் பல்வேறு பெயர்களைப் பரிசீலித்து இறுதியாக ‘கீற்று’ என்ற பெயரைப் பரிந்துரைத்தார்கள். ஓவியர் மருது Logo வரைந்து கொடுத்தார். 20000 ரூபாய் கடன் வாங்கி கணினி ஒன்று வாங்கினோம். ஆதவனும், புனிதபாண்டியனும் பல்வேறு இதழாசிரியர்களையும், எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தினார்கள். ஜூலை 24, 2005ல் கீற்று அரும்பியது.

புதுவிசை, தலித் முரசு, புரட்சிப் பெரியார் முழக்கம், புதிய காற்று என நான்கு இதழ்களுடன் தொடங்கப்பட்ட கீற்று, தற்போது 20க்கும் மேற்பட்ட இதழ்கள், நூற்றுக்கணக்கான கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என விரிந்து பரந்துள்ளது. குறிப்பாக கீற்று நேர்காணல்கள் தமிழ் இலக்கியச் சூழலில் பெரிய அளவில் விரும்பி வாசிக்கப்பட்டதும், ஏராளமான விவாதங்களைக் கிளப்பியதும் மகிழ்ச்சியான செய்திகளாகும்.

அதே நேரத்தில் இலக்கியம் மற்றும் அரசியல் பக்கங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம், அறிவியல், வரலாறு, சுற்றுச்சூழல், மாற்றுத்திரை மீதான கவனத்தைக் குறைத்து விட்டது ஒரு குறைதான். நான்காம் ஆண்டில் அதை நிவர்த்திக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம். அரசியல் மற்றும் இலக்கியப் பகுதிகளுக்கு படைப்புகள் அனுப்பி பங்களிப்பு நல்கியதுபோன்றே இந்தப் பகுதிகளுக்கும் அனுப்பி, உதவ வாசகர்களை வேண்டுகிறோம்.

படைப்புகளை வலையேற்றம் செய்வதில் ஏற்படும் தாமதம் குறித்து படைப்பாளிகள் சிலர் எங்களிடம் பேசினர். அவர்களுக்கு அளித்த விளக்கத்தை வாசகர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம். ‘திங்கள் முதல் வெள்ளி வரை வலையேற்றம் செய்யப்படும்’ என்று அறிவித்திருந்தாலும், அந்தத் தொடர்ச்சி கடந்த சில மாதங்களாக இல்லை. இதற்கு முதற்காரணம் கீற்றுவுக்கு என்று முழுநேர ஊழியர்கள் யாரும் இல்லாதது. கீற்று ஆசிரியர் குழுவில் இருப்பவர்கள் வருமானத்திற்காக வேறொரு வேலை செய்கிறோம். அந்த வேலை முடிந்து, வீடு திரும்புகிற மாலை நேரத்திலும், மறுநாள் வேலைக்குப் போவதற்கு முந்தைய அதிகாலை நேரத்திலும் கீற்று வேலையைப் பார்க்கிறோம். நாள் ஒன்றுக்கு மூன்று மணிநேரம் என மூன்று பேர் வேலை பார்த்தால்தான் கீற்றுவின் அனைத்துப் பகுதிகளையும் புதிதாக வலையேற்றம் செய்ய இயலும்.

வருமானத்திற்காகப் பார்க்கும் வேலையில் வேலைப்பளு அதிகமாகி, வீடு திரும்ப தாமதமாகும் நாட்களில் கீற்று வலையேற்றம் பாதிக்கப்படுகிறது. முழுநேர ஊழியரை பணி அமர்த்துவதற்கு கீற்றுவின் பொருளாதார நிலை ஆட்சேபம் தெரிவிக்கிறது.

இதழ்கள் சில தொடர்ச்சியாக வெளிவராமல் இருப்பதற்கான காரணத்தையும் வாசகர்களிடம் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். வெளிவரும் இதழ்களின் எண்ணிக்கையை 25 என்று நாம் கொண்டாலும், அவற்றில் சில இதழ்கள் தற்போது அச்சில் வெளிவருவதில்லை, அதனால் இணையத்திலும் வருவதில்லை. மீதமுள்ள இதழ்களில் சில, சிற்றிதழ்களுக்குரிய பொருளாதார சிக்கல்கள் காரணமாக தாமதமாகவே வருகின்றன. அவ்வாறு வந்தாலும், ஒரு சில இதழ்களைத் தவிர, ஏனைய இதழ்களின் குறுந்தகடைப் பெறுவது இமாலய சாதனையாகவே இருந்து வருகிறது. குறைந்தது 10 தடவையாவது தொலைபேசியில் நினைவூட்டினால் மட்டுமே குறுந்தகடு எங்கள் கைக்கு வருகிறது. அவ்வாறு கிடைக்கும் குறுந்தகடுகளிலும் - குறுந்தகடு உடைந்து வருவது, யுனிகோட்-க்கு மாற்ற முடியாத எழுத்துருவில் படைப்புகள் இருப்பது - மாதிரியான வேறு சில பிரச்சினைகள் இருக்கின்றன. அதனால்தான் இதழ்களை ! வல?¯ ?யேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது.

மூன்று ஆண்டுகளில் கீற்று சரியான பாதையில் பயணித்ததா என்று கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால், அம்பேத்கர், பெரியார், பாரதிதாசன் வரிசையில் பாரதியையும் நிறுத்தியது பிழையாகவே தொக்கி நிற்கிறது. கீற்று ஆசிரியர் குழுவில் இருப்பவர்களில் யாருமே முப்பது வயதைத் தொடாதவர்கள். எங்களது வாசிப்பின் போதாமையோடு, பாரதி குறித்து நிலவும் ‘all in all அழகுராஜா’ கருத்துப் பிம்பமும் சேர்ந்து கொள்ள இந்தத் தவறு நேர்ந்து விட்டது. ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ முகமூடியை விலக்கிவிட்டுப் பார்த்தால், பாரதியின் இந்துத்துவ கோர முகம் தென்படுவதை வாலஜா வல்லவனும், வே.மதிமாறனும் ஆதாரப்பூர்வமாக நிறுவியிருந்தாலும், அவற்றைப் படித்துணர்வதற்கு எங்களுக்கு இந்தக் காலம் தேவையானதாக இருந்திருக்கிறது. ஒருவர் பூமியின்கீழ் உள்ள எல்லாவற்றையும் படித்து முடிப்பதற்கு இயலாது என்ற சமாதானத?¯! ?தைà ??் போர்த்திக் கொள்ள மனம் எத்தனித்தாலும், தவறான ஒருவரை வழிகாட்டியாக வாசகர்களிடம் முன்னிருத்தியது பிழையேயாகும். அதற்குக் கழுவாயாக, பாரதியை நாங்கள் அறியக் காரணமான புத்தகங்களில் ஒன்றை வாசகர்களுக்குப் படிக்கத் தருகிறோம். புத்தகத்தின் முதல் அத்தியாயம் இங்கே.

வாசகர்களின் கருத்துக்களை அறிவதற்கும், அவர்களுடன் உரையாடுவதற்கும் வலைக்குழுமம் ஒன்றைத் தொடங்கியுள்ளோம். அதில் பங்கு பெற அழைக்கிறோம். பெருகும் ஆதரவினைப் பொருத்து, வாசகர் வட்டம் நடத்தும் எண்ணமுள்ளது. கீற்றுவிற்கு ஏதேனும் நிதி சேர்ந்தால் அடுத்த ஆண்டு ‘ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா’ நடத்தவும் உத்தேசமுள்ளது. கீற்றுவின் மீது அக்கறை இருக்கும் வாசகர்கள் அது தொடர்ந்து வெளிவருவதற்கு உதவியாக நிதி அளிக்க வேண்டுகிறோம். நிதி அளிக்க இங்கே அழுத்தவும்.

வேறென்ன? கீற்றுவின் புதிய வடிவம் குறித்தும், புதிய பகுதிகள் குறித்தும் அரிய ஆவலாக உள்ளோம்.

நன்றி.

என்றும் அன்புடன்,
கீற்று ஆசிரியர் குழு