உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

ஒரு குடியின் பயனம்!

ஒரு குடியின் பயனம்!

- கிராபியென் ப்ளாக்

""குடிப்பவனுக்கும், குடிகாரனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்வது அவசியமானது'' என்று தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். இன்றைய சமூகத்தில் அவ்வாறு குடியை வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய சூழல் அவசியமாய்த்தான் இருக்கிறது. காரணம் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துப் போயிருப்பதுதான். சாட்சி!


அரசே மதுக்கடைகளை எடுத்து நடத்துவது! ""தேவைப்படும் சமயத்தில் மட்டும் அளவறிந்து குடிப்பவனை குடிப் பழக்கம் உள்ளவன் என்றும்; எந்நேரமும் குடியில் மூழ்கியிருப்பவனைத்தான் குடிகாரன் என்று குறிப்பிட வேண்டும்'' என்றும் அவர் குறிப்பிடுகிறார். எதுவாயினும் குடிப் பழக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதே. ஆனாலும் பெரும் தீமைகள் குடிப் பழக்கம் உள்ளவர்களால் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் குடிகாரர்களால்தான்!


சந்திப்பு:


அன்றைய மாலை வேளையில் வானம் மிகுந்த மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வீட்டிலிருந்து புறப்படும் போது ஏறக்குறைய இருட்டத் தொடங்கி, தூறல்கள் விழ ஆரம்பித்து விட்டாலும், எச்சரிக்கையுணர்வுடன் வெளியே கிளம்பியதால் கையில் குடை இருந்தது. தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பெருமழை பிடித்துக் கொள்ள, அடர்ந்து பெய்யும் மழையை ரசித்த படி, இசாக்கின் வீடு நோக்கிச் சற்று நடந்து சென்று கொண்டிருந்தோம். சென்னை, சைதாப்பேட்டை -ஆலந்தூர் சாலையை ஒட்டியுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் நமக்காக காத்திருந்தார் கவிஞரும், குறும்பட இயக்குனருமான இசாக். மழையோடு நம்மை வரவேற்றவர் அவரது நிறுவனமான தமிழ் அலை ஊடக உலகத்திற்கு அழைத்துச் சென்றார். வழக்கமான இலக்கிய உரையாடல்களுக்குப் பிறகு, அவரது நீண்ட கணினித் திரையில் நண்பர்களோடு "ஒரு குடியின் பயணம்' குறும்படத்தை பார்க்கத் தொடங்கினோம்.


கதை:


இதுவென்று அறியாத பிரச்சினையால் குழந்தை அலறிக்கொண்டு இருக்கிறது. தாய் செய்வதறியாது திகைத்தபடி தன் குடிகார கணவனை வசைபாடிய படியே, மடியில் குழந்தையை கிடத்தி வைத்திருக்கிறாள். குழந்தை தொடர்ந்து அலறியபடி இருக்க, அருகில் வசிக்கும் வயதான கிழவி ஒருத்தி, குழந்தை அழுவதைப் பற்றி விசாரித்து விட்டு, அவனது கணவன் இருக்கும் இடத்தைச் சொல்கிறாள். தாய், குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவன் இருக்கும் இடம் நோக்கி நடக்கிறாள். குட்டி சுவற்றில் உட்கார்ந்து, நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் தன் கணவனை, மருத்துவமனைக்கு அழைக்க, அவன், அவளை வசைபாடிய படியே அவளோடு கிளம்பிச் செல்கிறான். இருவரும் அருகில் இருக்கும் நகரத்திற்கு வருகிறார்கள். அவன், தன் மனைவியை ஒரு பெட்டிக்கடை முன் காத்திருக்க சொல்லிவிட்டு போகிறான். போனவன் நேராக மதுக் கடைக்குள் நுழைந்து மறைய, கணவனை எதிர்பார்த்து வெகுநேரம் காத்திருக்கும் அவளை, அருகில் இருப்பவர்கள் விசாரித்து, பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.


அங்கே குழந்தையைப் பரிசோதிக்கும் மருத்துவர், ""குழந்தை இறந்து வெகுநேரம் ஆகிவிட்டது'' என்கிறார். ""ஐயோ... என் புள்ள போச்சே...'' என்று அலறித் துடித்தபடி மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது, அவள் எதிரே தள்ளாடியபடி வரும் கணவனை தள்ளிவிட்டு குழந்தையை அணைத்துக்கொண்டு வெளியேறுகிறாள். அவன் தெருவில் சுயநினைவின்றி விழுந்து கிடக்கிறான். பேருந்தில் பயணிக்கும் அவள் தன் குழந்தையை யாரும் கவனிக்காதவாறு, பீறிட்டுக் கொண்டு வரும் அழுகையையும் மறைத்துக் கொண்டு பயணிக்கிறாள். தனது ஊர் வந்ததும், மிகக் கவனமாக இறங்கும் அவள், பேருந்து சென்றதும் சாலையில் அமர்ந்து பெருங்குரலெடுத்து அழத் தொடங்குகிறாள். பின்னணியில் வயதான மூதாட்டியின் ஒப்பாரி அவளோடு சேர்ந்து ஒலிக்கிறது. இதயம் கனக்க வைக்கும் ஒப்பாரியோடு இருள் அவள் வாழ்வை சூழ படம் நிறைவடைகிறது.


விமர்சனம்:


மனித வாழ்க்கையில் குடியினால் ஏற்படும் பிரச்சினைகள் தொகுக்க முடியாத பக்கங்களாக நம் முன்னே விரிந்து கிடக்கின்றன. குடும்பத்திலும், சமூகத்திலும் அது தொடுக்கும் தாக்குதல்கள் மூர்க்கமானவை. குடியினால் வீழ்ந்த குடும்பங்களின் ஓலம் கிராமங்கள் தோறும் ஓங்கி ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் என்று பேச்சு வழக்கில் பலர் பேசுவதைக் கேட்டிருக்கலாம்.


அப்படியான குடும்பங்களின் வீழ்ச்சிக்குப் பின்னணியில் பெரும்பாலும் இருப்பது குடிதான். ஒரு குடும்பத் தலைவனது எல்லை மீறிய குடியானது, குடும்பத்தின் குதுகலத்திற்கு வேட்டு வைப்பதோடு, அவனது சந்ததியினரையும் நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது. இவ்வகையான குடும்பத்தில் வாழும் பெண் மக்களின் புலம்பல்கள், பொலிவிழந்த வீடுகளில் அழியாக் கனவுகளாக தொடர்ந்து வாழ்ந்த வண்ணம் இருக்கின்றன. குடிகாரனோடு தினம் தினம் மல்லுக்கட்டிக் கொண்டு மன உளைச்சலில் வாழும் மனைவி மார்களின் வலியும், இச்சூழலில் வளரும் குழந்தைகளின் மனோநிலையும் பதிவு செய்யப்பட வேண்டியவை. பயத்தின் பீதியில் உறைந்து போய், தனிமைப் பட்டு வாழும் அக்குழந்தைகளின் நாட்கள் கசப்பானவை. "ஒரு குடியின் பயணம்' குறும்படம் அப்படியான வாழ்க்கையிலிருக்கும் ஒரு சிறு பகுதியைத்தான் தொட்டுக் காட்டிச் செல்கிறது. தன் குழந்தையை பறி கொடுக்கும் ஒரு தாயின் மூலமாக, குடியின் மோசமான இயல்பை பதிவு செய்ய துணிந்திருக்கிறார் இயக்குனர். கிராமங்கள் தோறும் பள்ளிகள் இருக்கலாம். மருத்துவமனைகள் இருக்கலாம். ஏன், விளையாட்டுக் கூடங்களும், நூலகங்களும் கூட இருக்கலாம்.


ஆனால் மதுக்கூடங்கள் இருக்க வேண்டுமா? என்ற கேள்வியை காட்சிகளின் மூலமாக நம் முன்னே வைக்கிறார். படத்தில், தன் குழந்தை இறந்ததை அறிந்து அலறும் அவளின் குரல் மருத்துவமனையை விட்டு அவள் வெளியே வந்த பிறகும் கூட ஒலித்துக் கொண்டிருப்பதாக இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பார். படத்தைப் பார்த்து விட்டு, நாம் வேறு வேலைகளில் மூழ்கியிருக்கும்போதும் கூட அவளின் அலறல் நம் காதுகளில் தொடர்ந்து கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது, நம்மிடம் கேள்விகளை முன் வைத்தபடி!


அறிமுகம்:


இசாக் அடிப்படையில் ஒரு கவிஞர். தமிழின் மீது திவீர ஈடுபாடு கொண்டுள்ள இளைஞர்களில் ஒருவர். துபாயில் சில ஆண்டுகள் தங்கி வேலைப் பார்த்திருக்கிறார். தமிழின் தீவிர இலக்கியவாதிகளான கவிஞர் பழமலய், கவிக்கோ அப்துல் ரகுமான், அறிவுமதி, கடற்கரய் போன்ற இலக்கியவாதிகளிடம் நெருங்கிய தொடர்பு உள்ளவர். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு "இரண்டாவது கருவறை'.


அதைத் தொடர்ந்து சாரல் வெளியீடாக வெளி வந்தவை "காதலாகி', "மெüனங்களின் நிழற்குடை', "மழை ஓய்ந்த நேரம்' முதலியவை. இதில் "மழை ஓய்ந்த நேரம்' மட்டும் கவிஞாயிறு தாராபாரதி பரிசைப் பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய இந்த குறும்படம் துபாயில் சமூக ஆர்வலர்களிடையே திரையிடப்பட்டதும் அதனைத் தொடர்ந்து கிடைத்த பாராட்டுக்களும் தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் புதிது. இவர் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்ப் பேட்டை அருகே உள்ள நெய்வினைக் கிராமத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை போதை ஒழிப்பு போராளிகளுக்கு சமர்பித்திருக்கும் இவர், தற்போது புலம் பெயர்ந்த உழைப்பாளிகளின் உணர்வை மையமாக வைத்து "அந்நியம்' எனும் குறும்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.


nandri: Cinema Express