உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

வாழ்நாள் கனவு...




தினமணி நாளிதழில்

இந்த வாரம் கலாரசிகன்
******************************

கடந்த மூன்று மாதமாக எனது மேஜையில் இருக்கிறது இந்தப் புத்தகம். ஒவ்வொரு வாரமும் எழுத வேண்டும் என்று நினைப்பேன். எழுதப் புகுமுன் அது எங்கோ புத்தகக் குவியலில் ஓடி ஒளிந்து கொண்டுவிடும். இந்த வாரம் மறக்காமல் அந்தப் புத்தகத்தைத் தேடி எடுத்து வைத்துக் கொண்ட பிறகுதான் எழுதவே தொடங்கினேன்.

அது என்ன புத்தகம் என்றா கேட்கிறீர்கள்? ஒரு கவிதைத் தொகுப்பு. எழுதியவர் பெயர் இசாக். இவரொன்றும் எழுத்துலகத்துக்கும், கவிதைக்கும் புதியவரல்ல. கடல் கடந்து ரசிக்கப்படும் படைப்புகளுக்குச் சொந்தக்காரர். யதார்த்தமான சிந்தனைகளை சிக்கலே இல்லாமல் சர்வ சாதாரணமாகக் கையாளும் தன்னுணர்வுக் கவிஞர். இவரது கவிதைத் தொகுப்பின் பெயர், "துணையிழந்தவளின் துயரம்'.

பொருள்தேட வேண்டி குடும்பத்தைப் பிரிந்து வளைகுடா நாடுகளில் இரவு பகல் பாராமல் உழைக்கும் மனித மனங்களின் சோகச் சித்திரத்தை வார்த்தை வடிவமாக்கி இருக்கிறார் கவிஞர் இசாக். இந்தத் தொகுப்பில் வெளியாகி இருக்கும் கவிதைகளில் சில, பல முன்னணி இதழ்களில் பிரசுரமானவைதான் என்றாலும், ஒரு தொகுப்பாகப் படிக்கும்போது அதன் வீச்சும், தாக்கமும் அலாதிதானே!

இசாக்கின் கவிதைகளில் பாலைத் திணையின், "பிரிதலும் பிரிதல் நிமித்தமும்' தற்காலத் தன்மையுடன் பேசப்படுகின்றன என்கிற இந்திரனின் கருத்து மிகமிக உண்மை.

வாழ்க்கையில்

விடுமுறை நாட்கள்

வரும் போகும்

அனைவருக்கும்...

விடுமுறை நாட்களில்தான்

வந்து போகிறது

வாழ்க்கை

நமக்கு!

******************************

துபாய்!

வெளியில் இருப்பவனுக்கு

வாழ்நாள் கனவு...

உள்ளே இருப்பவனுக்கு

வாழ்நாளே

கனவு!