உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

சந்திப்பு

ஞெகிழி குவளையில்
சூடான தேனீரை நிரப்பியபடி
தொடங்குகிறாய்
உன்
குளிர்ச்சியான பேச்சை.

தீதொன்றும் அறியாத
எனக்கு
நச்சுத்தெரிக்கும் சொற்கள்
அடையாளப்படாமலே
காற்றில் கலந்தழிகின்றன.

என்னை கடந்துவிட்ட
சூழ்ச்சிகளை
தேடும் முயற்சியில்
புதிய தாக்குதல்களுக்கும்
எதிர்வினையாற்ற
இயலாதவனாகி நிலைகுளைகிறேன்.

பழையன மறந்து
ஆயத்தமாகவே உள்ளேன்
இனி
உன் தாக்குதல்
எத்திசையிலிருந்து வந்தாலும்
சந்திப்பேன்.