உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

வீடென்றவொன்று

சொந்தமாக
நவீன வசதிகளோடு
வீடொன்று
கட்டிவிட வேண்டுமென்பதே இலட்சியமானது
பிழைப்பிற்கென்று
கடல் கடந்துவிட்டயெனக்கு

வாயக்கட்டி.. வவுத்தக்கட்டி
அங்குமிங்கும் புரட்டி
கட்டிமுடிந்தது
அழகிய வீடு நினைத்தபடி

''தாராளமான சொந்த வீடெனக்குண்டு''
பெருமை பேசியும்
வீட்டின்
அழகையும், அமைப்பையும்
புகைப்படங்களில் இரசித்தும்
வழக்கம் போல
இரண்டரைக்கு ஆறு அடி படுக்கைக்குள்
காலத்தைக் கடத்துகிறேன்