உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

அடையாளம்

விழா மேடைகளைப் போன்ற திண்ணை
இடித்தகற்றப்பட்டு
சுற்றுச்சுவராலும்
விளையாட்டரங்கையொத்த பின்வாசல்
சுருங்கி
இரும்பு வேலியாலும்
பாதுகாப்பானதாகிவிட்டதென் புதிய வீடு.

எப்போதும்
உறவுளாலும் அக்கம்பக்கத்து தொடர்புகளாலும்
நிரம்பி வழிந்திருந்த சூழல்கள் மாறி
எப்போதாவது
விசேச காலங்களில்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வந்திருந்து
திரும்புகின்றனர் இப்போது.!

அவர்களிடமும்
பளிங்குத் தரை பார்தாயா..
உயர் ரக வண்ணப் பூச்சு கண்டாயா..
நவீன சமையலறை.. அதிநவீன கழிப்பறை...
அதில் சாயாதே..
இதில் அமராதே..
கறையாகும் உடைந்து போகுமென
அறிவுறுத்தும் பெரிசுகளின் பேச்சுகள்
குறைந்தவர்களையும் குறைக்கும்.!

நவீனங்களும்
அதிதீவிர பாதுகாப்பும்
வீடெங்கும் நிரம்பியிருக்க
யாரும் நடமாட்டமற்றயென் வீட்டில்
துபாய்காரன் வீடு யென்கிற
அடையாளம்
மட்டும் மிச்சமிருக்கலாம் நாளை.!