உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

'தை' வந்தால் கவிதை சிறக்கும்.

'தை' வந்தால் கவிதை சிறக்கும்.

தமிழ்க் கவிதை விரிந்த பறந்த வரலாறுகளையுடையது. தனிச்சிறப்புடைய தமிழ்க்கவிதை தனது இருக்கமான தனிமை நிலையிலிருந்து வெளியேறி மக்கள் மயப்பட்டு வெகுகாலமாகிவிட்டது. அரசையும் ஆன்மீகத்தையும் மட்டும் பேசிவந்த கவிதையுலகம் தன்னை பொதுமைப்படுத்திக்கொண்டு அதற்குரிய சரியான தளத்தில் இயங்குவது மக்களைப் பற்றியும், மக்கள் பிரச்சினைகள் பற்றியும் பேசத்தொடங்கியதிலிருந்து தமிழில் கவிதையின் இருப்பும் தேவையும் மிக முக்கியமானதாகிவிட்டது. தமிழ்க்கவிதை பாரதியில் தொடங்கி தமிழர்களின் தனிப்பெரும்கவி புரட்சிக்கவிஞரால் வளர்ந்து அவர் வழிவந்த கவிஞர்களால் சிறந்துள்ளது.

கண்ணதாசன், வானம்பாடி, அன்னம் எனவந்த கவிதைக்கான இலக்கிய இதழ்கள் தமிழ்க்கவிதைக்கு வளம் சேர்த்தன. மிக சமீபத்தில் 'அப்துல்ரகுமான்' என்னும் பெயரில் அறிவுமதியால் தொடங்கப்பட்டு அப்துல் ரகுமான் அவர்களை முதன்மை ஆசிரியராகவும், ஆசிரியர் குழுவினராக பல முன்னணிக் கவிஞர்களைக் கொண்டு 'கவிக்கோ' என்னும் பெயரில் சிலகாலம் வெளியான கவிதையிதழ் பல நல்ல இலட்சியங்களை முன்வைத்து இயங்கியது. கவிஞர்களின் ஒத்துழைப்பும் வாசகர்களின் ஆதரவும் முழுமையாக கிடைக்காத தமிழ்ச்சூழல் காரணமாக அது நின்றுபோனது.

தமிழ்ப்படைப்பாளிகளை ஒருங்கிணைத்து இதழ் நடத்துவது சுலபான செயலல்ல. அதுவும் கவிஞர்களை ஒருங்கிணைப்பது சொல்லவே தேவையில்லை. இப்படிப்பட்ட சூழலிலும் கவிதையின் வளர்ச்சியில் அக்கறையுடைய சிலரால் அங்கொன்றும் இங்கொன்றுமாக கவிதையிதழ்கள் நடத்தப்பட்டு வருகின்ற சூழலில், சமீபத்தில் மாற்று என்னும் பெயரில் கவிஞர் சி. சுந்தரபாண்டியனால் கவிதையிதழ் தொடங்கப்பட்டுள்ளது.

இப்படியான சூழலில் கவிஞர் அறிவுமதியால் இப்போது தொடங்கப்பட்டுள்ள கவிதைக்கான இதழ் 'தை'. இலக்கிய மற்றும் கவிதையிதழ்கள் எல்லோருக்குமாக இயங்கிய சூழல்கள் மாறி தனி குழுவுக்கான திட்டங்களோடு செயல்படுகிற சிக்கலான நிலைமை தமிழகத்தில் வளர்ந்து விட்டது. அச்சிக்கலை கிழித்தெரிகிற தொலைநோக்கு பார்வையோடு ஒர் இதழ் தேவையாக இருக்கிற சூழலில் 'தை' கவிதையிதழை கவிஞர் அறிவுமதி தொடங்கியிருப்பது வரவேற்கதக்கது.

தமிழ்க்கவிதை தமிழர்களுக்காக இயங்க வேண்டும் தமிழர்களின் வாழ்க்கை தமிழ்க்கவிதையாக வேண்டும் இது இன்றைய கட்டாய தேவை. இத்தேவையை நிறைவு செய்யும் வகையில் தை இருக்கும் என நம்பும் வகையில் அதன் ஆசிரியர் தலையங்கம் அமைந்துள்ளது. மாற்று மொழிகளிலிருந்தும், மாற்று மண்ணிலிருந்தும் தமிழுக்கு வளம் சேர்க்கும் படைப்புகளையும், படைப்பாளிகளையும் தை அறிமுகப்படுத்த அணியமாகவே இருக்கிறது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் கவிதைகள், புலம்பெயந்து வாழ்வோரின் வாழ்வை பேசும் கவிதைகள் என அனைத்தையும் அள்ளித்தர தை காத்திருக்கிறது. இதழின் வடிவமைப்பு சர்வதேச இதழுக்கான தகுதியோடு வெளிவந்துள்ளது. இன்னும் சிறப்பாக வெளிவரும் என்ற நம்பிக்கையையும் தருகிறார் அறிவுமதி.

முதல் இதழில் அப்துல் ரகுமான், சிற்பி, மு.மேத்தா, இன்குலாப், தமிழன்பன், இந்திரன் என தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் முதல் ரவி சுப்ரமணியன், பழநிபாரதி, பச்சியப்பன், கபிலன், நந்தலாலா, இளம்பிறை, நா.முத்துக்குமார். தமிழச்சி, அழகுநிலா, கோசின்ரா, புகழேந்தி, என இலக்கிய உலகில் அடையாளப்பட்ட கவிஞர்கள் பலரின் படைப்புகளையும் வளர்ந்து வரும் இளங்கவிஞர்களின் படைப்புகளையும் தாங்கி முதல் இதழ் வெளியாகியுள்ளது.

தமிழர்கள் எங்கெங்கெல்லாம் சென்று வாழ்கிறார்களோ அங்கெல்லாம் நல்ல படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களின் படைப்புகளையும் தமிழுலகுக்கு தந்துள்ளது. துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஈழம், சுவிஸ் என தை இதழின் கிளைகள் விரிந்திருக்கின்றன. இந்த பதிவுகள் தொடர புலம்பெயர்ந்த படைப்பாளிகள் முழுமையாக முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இம்முயற்சி சிறப்பாக தொடரவேண்டும். தை இதழின் கவிதைப்பணி தொடர தமிழார்வலர்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். கடல் கடந்து வாழுகிற தமிழர்கள் நன்கொடைகள் வழங்கியும், நல்ல படைப்புகளை சேகரித்து அளித்தும் உதவ முன்வரவேண்டும்.

தை இதழ் குறித்து ஆலோசனைகள், விசாரிப்புகள், படைப்புகள் அனைத்தையும் அன்பர்கள்.
அறிவுமதி
சாரல் பதிப்பகம்
189. அபிபுல்லா சாலை
தியாகராய நகர்
சென்னை. 600017
தமிழ் நாடு
என்னும் முகவரிக்கு எழுதுங்கள்.
மின்னஞ்சல் செய்ய.. arivumathi@hotmail.com, thaiithaz@gmail.com என்னும் முகவரியை பயன்படுத்துங்கள்.
பேச// 00919444280864, 00971 503418943 எண்களைப் பயன்படுத்துங்கள்.
விவரங்கள் அறிய.. http://www.thaiithaz.blogspot.com