உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

அடிமையின் பெருமை

அடிமையின் பெருமை


தாத்தா காலத்திலேயே
பழக்கமற்றதாகிப் போனது
கொஞ்சம் நஞ்சம் பழகியிருந்த
விவசாயம்.

அத்தா காலத்தில்
அறிமுகமில்லாத தொழிலானது
அரைக்குறையாக தெரிந்திருந்த
வியாபாரம்

முந்தி பிறந்தவர்களும்
வாழ்க்கையில் கரைசேர
வழியெதையும் காணவில்லை
கைத்தொழிலாக.

கல்வி
கற்று முன்னேறும்
வழியும் வாய்ப்பும்
கானல் நீர் கனவானது
எனக்கு

பட்டப்படிப்புக்கோ
அரசுப் பணிக்கோ
போட்டிப் போடுகிற வசதியற்றதாக
திரிகின்றன
வாரிசுகள்.

அரசியல்வாதிகள்
ஒருவனுக்கும் தரவேண்டும் என்றோ
ஒற்றுமையாக கேட்டுப் பெறவேண்டுமென்று
எங்களுக்கோ
கனவிலும் தோன்றாததாக
இடஒதுக்கீடு.

எது எப்படியிருந்தாலும்
பெருமையாகதான் இருக்கிறது
எங்களுக்கு
அரபு நாடுகளில்
அடிமைகளாக பணியாற்றுவது.