உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

இயக்குநர் அமீருக்கு..

அன்பு இயக்குநர் அமீர் அவர்களுக்கு..

தங்களின் படைப்பின் மீது மரியாதையுடைய ஓர் உடன் பிறந்தானின் மடல்.

தங்களின் பருத்திவீரன் பார்த்தேன். துபாய் வாழ்வில் திரைப்படங்கள் பார்ப்பது அவ்வளவு எளிதானதல்ல. அதுவும் இப்போது வெளிவரும் தமிழ் திரைப்படங்களை பார்ப்பது என்பது.. அடடா சொல்லவே வேண்டாம். பெயரும், உரையாடல்களும் தமிழில் உள்ளன.. அவ்வப்போது, அவ்வளவு தான். அவை தமிழருக்கான திரைப்படங்களா..? என்றால் இல்லை. இப்படியான சூழலுக்கிடையில் நம் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க விரும்பாததால் தமிழில் வரும் படங்களை பார்ப்பதை தவிர்த்துள்ளேன்.

ஆனால்.. சமீப காலமாக தாங்கள் வெளியிட்டு வந்த பருத்திவீரன் பற்றிய கருத்துகளும், தங்கள் மீதான நம்பிக்கையும் பருத்திவீரன் பார்க்க தூண்டியது.

திரைப்படம்.. தொடங்கும் போதே தனித்தன்மையோடு நம் கிராமிய கலை சார்ந்த காட்சிகளோடு தொடங்குகிறது. மகிழ்வாக இருந்தது...

கலைக்கு மொழி இனம் தேச எல்லைகள் இல்லை என்று சில கலை கிறுக்கர்கள் சொல்லும் கருத்தின் மீது எனக்கு மரியாதையில்லை. இப்படியான கருத்துகள் பண்பாட்டை பாதுகாக்கும் எண்ணமற்ற தமிழர் விரோதிகளினுடையது.

உலகமெங்கும் மிக சிறந்த படைப்புகளாக அடையாளம் காணப்பட்ட படங்கள் அந்தந்த மண்ணின் பண்பாட்டு கூறுகளை அடிப்படையாக கொண்டவை. ஈரான் படங்கள் முதல் இந்திய ஒன்றியத்தின் சத்யஜிரே வரை ஆதாரங்கள் உள்ளன.

''ஒரு சிறந்த படம் என்பது எந்த மொழியிலும் மொழி பெயர்க்க முடியாத அடர்த்தியான பண்பாட்டுக்கூறுகளை உள்ளடக்கிய காட்சியையும், மொழி நடையையும் கொண்டதாக இருக்க வேண்டும்'' என்கிற அண்ணன் அறிவுமதியின் கருத்து மிக சரியானதாகும்.

இந்த அடிப்படையில் தங்களின் பருத்திவீரன் தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரியவன். அவனை எவனும் மாற்றிக்கொள்ள முடியாது.., விரும்பினால் அப்படியே அழைத்துச் செல்லட்டும்.. ஒரு தமிழனாக. ஒவ்வொரு காட்சியும் மண்ணிலிருந்து பிடுங்கி எடுக்கப்படும் மணிலாவை போல, கொடிவள்ளிக் கிழங்கு போல மண்ணோடு காட்சியளிப்பது பாராட்டுக்குரிய பதிவு. இதற்கு ஆளுமைமிக்க உழவனின் உழைப்பு தேவை.. அது அமீரிடம் இருந்ததால் சாத்தியமாகியுள்ளது.

பருத்தியூரில் வாழ்ந்த வீரனும், முத்தழகும் உலகமெங்கும் வலம் வருகிறார்கள் எந்த ஒப்பனையுமில்லாமல்.. ஆமாம் ஒப்பனை ஏமாற்றுக்காரர்களின் ஆயுதம். அமீர் பண்பாட்டை தமிழை நேசிப்பது பொய்யல்ல... அதனால் அவரின் பிரதிகள் அசலாக வலம் வருகின்றன. சினிமா கோட்பாடு பற்றி பேசும் பெல பேஸ் இருப்பவற்றை அப்படியப்படியே தருவது சிறந்த சினிமா என்கிறார். இதைதான் அமீர் செய்திருக்கிறார்.

எல்லாவற்றையும் நாயக வெற்றிக்குட்பட்டே பார்த்து பழகிய தமிழ் இரசிக மனம் பருத்திவீரனுக்கும், முத்தழகுக்கும் ஏற்பட்ட முடிவை எளிதாக ஏற்காது. வேறு வழியில்லை.. அமீர், இவர்களுக்கு ஏற்பட்ட முடிவு இயல்புதானே.. சாதாரண எவருக்கும் நிகழும் முடிவு இப்படிதான் இருக்கும்.

நமக்கு எதிரானதாகவோ, உடன்பாடற்றதாகவோ இருந்தாலும் ஆவற்றை அப்படியே காட்டுவது உண்மையான கலைஞனின் கடமை. எந்த காட்சியும் திட்டமிட்டு பரபரப்புக்காகவோ அதிர்வூட்டுவதற்காகவோ உருவாக்கப்பட்டிருப்பதாக எனக்கு தெரியவில்லை.. ஆகவே அமீர் உண்மையான கலைஞர்.

பருத்திவீரன் கதை பற்றியோ.. காட்சிகள் பற்றியோ விரிவாக பேசாமல் திரைப்படத்தின் ஓட்டத்தில் என் கருத்தை என் கருத்தியல் சார்ந்து பதிவுசெய்கிறேன். ஏனெனில் கோட்பாட்டளவில் தமிழருக்கென கலைகளை உருவாக்கும் படைப்பாளிகள் குறைவு. குறைந்தவர்களில் ஒருவரான அமீரின் படைப்பை தொழில்நுட்ப அடிப்படையில் கணிக்காமல் என் கருத்தியல் சார்ந்தேன் கணித்திருக்கிறேன்.

அமீர் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

இன்னும் துள்ளியமான பண்பாட்டு கூறுகளின் அடிப்படையில் படைப்புகளை வெளியிடுங்கள்.. அது உங்களால் முடியும்.. ஏனெனில் வணிக மயப்பட்ட கலைஞனல்ல நீங்கள்.