உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

'சிவாஜி திரைப்படத்தைப் புறக்கணியுங்கள்!"

அன்பர்களே
இப்போது சிவாஜி காய்ச்சல் தமிழர்களை வாட்டுகிறது. என்ன செய்ய முடியும் நம்மால். இருந்தாலும் ஆஸ்திரேலியாவிலிருந்து நண்பர் கரன் நடத்தும் தமிழ்நாதம் இணையத்தில் தோழர் அரங்கன் எழுதி வெளிவந்த கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். இன உணர்வுள்ள தோழர்கள் முழுமையாக வாசியுங்கள்.

ரஜினி காந்த் அவர்களோடு தனிப்பட்ட பகை எதுவும் எமக்கில்லை. தமிழர்களை முட்டாளாக்குவதையும், தமிழர் பொருளாதாரத்தை சுரண்டுவதையும் மானமுள்ள நம்மால் அனுமதிக்க முடியாது. ஆகவே வாசியுங்கள்..

'சிவாஜி திரைப்படத்தைப் புறக்கணியுங்கள்!"

-அரங்கன்


'தேவன் வரப் போகின்றார், 'தேவன் வந்து கொண்டிருக்கின்றார்", இதோ தேவன் வந்து விட்டார்" என்பது போன்ற தெய்வீகச் செய்திகளுக்கு மேலாக, 'இதோ ரஜனிகாந்தின் சிவாஜி வரப் போகிறது" என்ற பரபரப்பான செய்திகள்தான் இன்று தமிழ்நாட்டையும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் வணிகப் பத்திரிகைகளும், உலகின் தமிழ் இணையத்தளங்களும் இதைத்தான் எழுதிக் கொண்டிருக்கின்றன. இந்த தேவனின் வருகைக்காக தமிழ் மக்களும், புலம்பெயர்ந்துள்ள தமிழ் உறவுகளும் ஏங்கித் தவித்த நிற்பது போன்ற தோற்றம் கூட உருவாகிவிட்டது. அது உண்மையாகக் கூட இருக்கலாம்.

சுப்பர் ஸ்ரார் என்கின்ற ஆங்கில சொற்தொடரை தனது பெருமையாகக் கொண்டிருக்கும் சிவாஜிராவ் என்கின்ற கன்னடனை முன்னிறுத்தி செயற்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டங்களின் ஊடாக, தமிழன் எவ்வாறு திசை திருப்பப்பட்டு, அவனது பண்பாடும் எதிர்காலமும் எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பது குறித்து பலருக்கு அக்கறை இல்லை. ரஜனிகாந்த் ஊடாக மாபெரும் சீரழிவு ஒன்று உருவாகி வருகிறது அல்லது உருவாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

ரஜனிகாந்த் மட்டும்தான் இந்த சீரழிவை செய்கிறாரா, மற்றவர்கள் செய்யவில்லையா என்று கேள்வி கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு தவறைக் கொண்டு இன்னொரு தவறை நியாயப்படுத்தக்கூடாது. அது மட்டும் அல்லாமல் இன்று வரை அல்லது நேற்றுவரை தமிழக சினிமாவில் ரஜனிகாந்த் என்கின்ற நடிகர் மீது தமிழ்நாட்டு மக்கள் கொண்டிருப்பதாக சொல்லப்படும் திரைப்பட மோகமும் சாதாரணமானது அல்ல. அவருடைய தாக்கமும் வீச்சும் முக்கியமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இன்று தமிழ்நாட்டு திரைப்பட ரசிகர்களின் ஆதரவு காரணமாக பணமும் புகழும் பெற்று வாழ்ந்து வருகின்ற ரஜனிகாந்த் என்கின்ற கன்னட மனிதரின் பண்பாட்டு சீரழிவுத் திரைப்படங்கள் செய்கின்ற தாக்கம் ஒருபுறம் இருக்கட்டும். ரஜனிகாந்த் என்கின்ற ஒரு மனிதரை ஒரு கன்னடன் என்று சொல்லி தமிழர்களிடம் இருந்து அந்நியம் பேசுவது சரியா? அதனை தமிழர்கள் செய்யலாமா? என்று சில நியாயமான கேள்விகளும் எழுகின்றன. அவைகளுக்கு உரிய பதில் என்ன?

அவைகளுக்கு உரிய பதிலும் ரஜனிகாந்திடம் இருந்தே வருகின்றது. வந்தும் இருக்கின்றது. ரஜனிகாந்த் எப்போதுமே தன்னை ஒரு கன்னட வெறியன் என்று காட்டியும், நடந்தும் வந்திருக்கிறார் என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. சில பழைய சம்பவங்களை சொல்வது இங்கே பொருத்தமாக இருக்கும்.

ரஜனிகாந்த் முன்னாள் சிவாஜிராவாக இருந்த போது செய்த பல தொழில்களில் ஒன்றான, மூட்டை தூக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் போது 'கன்னட பாதுகாப்பு இயக்கம்" என்கின்ற கன்னட தீவிர இயக்கத்தின் உறுப்பினராக இருந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் படைப்பில் எம்ஜிஆர் அவர்கள் நடித்த 'காஞ்சித் தலைவன்" என்ற திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டது. அதில் கன்னட மன்னன் ஒருவனை தாழ்த்தி சில வசனங்கள் சொல்லப்பட்டிருந்தன.

இதற்கு தங்கள் கன்னடத்தை (கண்டனத்தை) காட்டுவதற்காக தமிழர்களின் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதனை முன்னின்று செய்தவர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை. தமிழ்நாட்டின் இன்றைய சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்தான் அதை முன்னின்று செய்தார். இன்றைய தினம் வரை ரஜனிகாந்த் 'கன்னட பாதுகாப்பு இயக்கத்தின்" உறுப்பினராகத்தான் இருக்கிறார். அவருடைய அண்ணன் சத்தியநாராயணா இந்த இயக்கத்தின் ஒரு அமைப்பாளராகவும் இருக்கின்றார்.

இது குறித்து கன்னட தீவிரவாத இயக்கமான சளுவளி இயக்கத்தின் தலைவரான வட்டாள் நாகராஜ் 1992 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி வெளிவந்த 'சுடச் சுடச் செய்தி" என்ற பத்திரிகைக்கு தெளிவாகவே செவ்வி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில் 'இங்கே தமிழர்களின் கடைகளை அடித்து நொருக்குவதற்கு சிவாஜிராவ்தான் முன்னணியில் நிற்பான், ஏனென்றால் அவனுக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது, சிவாஜிராவ் நம்ம பையன், அவரை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அத்தோடு சத்தியநாராயணாவின் பிள்ளைகள் 'கன்னட இளைஞர் முன்னணி" என்ற அமைப்பையும் ஆரம்பித்துள்ளார்கள், அப்படி ரஜனிகாந்தின் குடும்பமே கன்னடர்களுக்கு ஆதரவாக உள்ளது, தன்னுடைய படம் தமிழ்நாட்டில் ஓட வேண்டும் என்பதற்காக அவர் செய்கின்ற தமிழர் ஆதரவுப் பேச்சுக்களை நாம் பொருட்படுத்தக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படங்கள் அனைத்தும் கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்பே திரையிடப்பட முடியும் என்ற நிலை இருக்கின்ற போது, ரஜனியின் 'சிவாஜி" திரைப்படம் மட்டும் உடனடியாகவே எவ்வித பிரச்சனையும் இன்றி கர்நாடகத்தில் திரையிடப்பட முடிவதன் ரகசியமும் இதுதான்.

1991 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டு, மேலும் ஆயிரக்கணக்கானோர் அகதியாக ஓடி வந்து வந்த போதும் இந்த ரஜனிகாந்த் அவர்களுக்காக வாய் திறக்கவில்லை. நெய்வேலியில் தமிழ்நாட்டு திரையுலகம் பேரணி நடத்திய போது, தனித்து உண்ணாவிரதம் இருந்து ஒற்றுமைக்கு உலை வைத்தார்.

தமிழ்நாட்டு ரசிகர்களின் ஆதரவால் தான் பெற்ற கோடிக்கணக்கான செல்வத்தை ரஜனிகாந்த் இன்று கர்நாடாகவிலேயே பெரும்பாலும் முதலீடு செய்து தொழிற்சாலைகளும் மற்றும் வியாபாரங்களுமாக நடத்தி, தனது இனத்திற்கு உதவி செய்வது ஒரு விதத்தில் பாராட்டப்படக் கூடியதுதான். தான் எங்கு சென்று உழைத்தாலும், தனது இன மக்களும் மாநிலமும் பயன்பெற வேண்டும் என்கின்ற அவரது கன்னடப்பற்றும் பாராட்டுக்கு உரியதுதான்.

ஆனால் வேறொரு இனத்தினை (தமிழ் இனத்தை) ஏமாற்றியும், அவர்களை முட்டாள்கள் ஆக்கியும் அந்த இனத்தின் இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தியும் அதன் மூலம் தன்னுடைய இனத்திற்கு உதவி செய்வது என்பது கண்டிக்கத்தக்கது.

வீரப்பன் கடத்திச் சென்ற கன்னட நடிகர் ராஜ்குமாரை ஐயா பழநெடுமாறன் அவர்களும், நக்கீரன் கோபால் அவர்களும் காடு சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தி மீட்டு வந்த போது, நடிகர் ரஜனிகாந்த் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒரு அறிக்கை விடுத்தார். அதில் குறிப்பாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் அவர்களுக்கு ஒரு பாராட்டை தெரிவித்திருக்கின்றார். ரஜனி அந்தப் பாராட்டில் என்ன சொன்னார் தெரியுமா?

'நீங்கள் செய்த இந்த முயற்சி காரணமாக கர்நாடகாவில் தமிழர்களின் ரத்த ஆறு ஓடுவது தவிர்க்கப்பட்டு உள்ளது"

'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி" என்கின்ற மாதிரி கன்னடர்களை தமிழர்களுக்கு எதிராக கிளப்புகின்ற அறிக்கையை ரஜனிகாந்த் வெளியிட்டார். அட, வீரப்பன் என்கின்றவர் ராஜ்குமார் என்கின்ற நடிகரை கடத்தினால் ஏன் கர்நாடகத்து தமிழர்கள் இரத்தம் சிந்த வேண்டும்? ஏன் அப்படி ஒரு சிந்தனையை தமிழ்நாட்டில் வாழுகின்ற இந்த ராஜனிகாந்த் என்கின்ற நடிகர் சொல்கிறார்?

'கர்நாடகத் தமிழர்கள் இரத்தம் சிந்தினால், தமிழ்நாட்டில் கன்னடர்களின் இரத்தம் ஆறாக ஓடும்" என்று யாராவது கர்நாடகத்தில் சொல்லி இருக்க முடியுமா? சொல்லியிருந்தால் அவர்கள் கதி என்னவாகி இருக்கும்? அதுதான் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் உள்ள வித்தியாசம்.

அன்று தனது 'பாபா" திரைப்படத்திற்கு அதிகூடிய கட்டணத்தில் நுழைவுச் சீட்டுக்களை விற்பதற்கு அனுமதியை பெறவேண்டும் என்பதற்காக அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு சத்தியநாராயணா மூலம் மலர்க்கொத்து ஒன்றினை அனுப்பி சமாதானத் தூது விட்ட இந்த ரஜனிகாந்த் சில வருடங்களிற்கு முன்பும் செல்வி ஜெயலலிதாவிற்கு அன்புடன் ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் முன்னிலையில் ரஜனிகாந்த் பேசும் போது சொல்கிறார் 'அம்மா, விடுதலைப் புலிகளால் மட்டும் உங்களுக்கு ஆபத்து வரும் என்று நினைக்காதீர்கள்! இங்கேயும் சில புலிகளால் உங்களுக்கு ஆபத்து வரலாம்! ஆகவே, கவனமாக இருங்கள்! - இது ரஜனிகாந்தின் அன்பான அறிவுரை!

இந்த ரஜனிகாந்த் 2001 ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சனை குறித்து பேசும் போது, 'இது புராணங்கள் எமக்கு தருகின்ற விளக்கம்" என்று புதிராக கருத்தினை வெளியிட்டார். தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஒத்து வராது என்று முன்னர் சொன்ன போது, ரஜனிக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தன. அப்போது ரஜனியை காப்பாற்ற ஓடோடி வந்தவர் வேறு யாருமில்லை. தந்தை பெரியாரின் பாசறையில் பயின்ற கலைஞர் கருணாநிதிதான். பெரியாருக்கு எதிராக ரஜனி சொன்ன கருத்துக்களை மழுப்பி அறிக்கை ஒன்றை விட்டு நிலைமையை சமாளித்த கருணாநிதி ரஜனியை கண்டிக்கக்கூட இல்லை.

தமிழ்நாட்டு தமிழர்களை சிந்திக்க விடாமல் திரைப்பட மாயையில் அமிழ்த்தி வைத்திருக்கும் அதிகார சக்திகளின் ஒரு கருவிதான் இந்த ரஜனிகாந்த் என்பதில் ஐயமில்லை. ரஜனிகாந்த் என்கின்ற கருவி மழுங்கிப் போனால், புதிய ஒரு முகத்தை உருவாக்கும் பணியில் இந்தச் சக்திகள் இறங்கக்கூடும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

இதேவேளை தமிழ்நாட்டு தமிழர்களை மட்டும் இந்த திரைப்பட மாயை பாதிக்கவில்லை. இதற்கு பலம் சேர்த்து உலகம் எங்கும் பரவச் செய்ய உறுதுணையாக இருப்பதில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. இன்று தமிழகத்தின் மிகப் பெரிய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் நம்பி இருப்பதும், தங்கி இருப்பதும் புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தைத்தான்.

தமிழ்ப் படங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் முன்பு வைத்ததற்கும், பாடல்கள் ஆங்கிலத்தில் பாடப்படுவதற்கும், வசனங்கள் தமிங்கிலத்தில் பேசப்படுவதற்கும் தமிழனின் பண்பாடு பகிரங்கத்தில் சீரழிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்ற தமிழ்நாட்டில் வாழும் மார்வாடிப் பண முதலீட்டார்களக்கு கைகொடுத்து உதவுவது எமது புலம்பெயர்ந்த தமிழர்களே.

இந்திய - சீன யுத்தத்தின் போதும், கார்க்கில் போரின் போதும் மற்றைய வேறு பிரச்சினைகளின் போதும் நிதி சேகரித்துக் கொடுப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டு திரைப்படத் துறையினர்தான் முன்னிற்கிறார்கள். அவர்களுடைய வருவாயில் முக்கிய பங்கை செய்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் இரத்த உறவுகள் கொடிய அடக்குமுறையில் துன்பப்படுகின்ற போது இந்தத் திரைப்படத்துறையினர் என்ன செய்து கிழித்தார்கள்?

தென்னாபிரிக்காவில் நிறவெறி என்றவுடன் அந்த நாட்டுடன் விளையாட்டுப் போட்டிகளை தவிர்த்த நாடுகளும் மக்களும் உண்டு. சீனாவில் மனித உரிமை மீறல்களுக்காக அவர்களின் உற்பத்திப் பொருட்களை வாங்க மறுத்தவர்கள் உண்டு. அதே போல் தமிழ் இனப் பண்பாட்டின் சீரழிவை, மொழிக் கொலையை நாம் ஏன் எமது செலவில் இறக்குமதி செய்ய வேண்டும்?

இதற்கு தீர்வாக பலர் பலதரப்பட்ட கருத்துக்களை சொல்கிறார்கள். இது நடைமுறைச் சாத்தியம்தானா, இதற்கு அனைத்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் ஒத்துழைப்பார்களா என்ற யதார்த்தமான கேள்வியையும் சிலர் கேட்கிறார்கள். திரைப்படங்களை திரையில் பார்க்காது ஒளிநாடாக்களிலும், குறுவெட்டுக்களிலும் பார்க்கலாம் என்று சிலர் மாற்றுத் தீர்வு யோசனை சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டின் அரசியலையும், பொருளாதாரத்தையும் தீர்மானிக்கின்ற மிக முக்கியமான சக்தியாக இன்று தமிழ் திரையுலகம் விளங்குகின்றது. கலைஞரின் வார்த்தைகளை கடன் வாங்கினால் 'அது இன்று கொடியவர்களின் கூடாரமாக விளங்கி வருகின்றது". ஆனால் இந்தக் கொடியவர்களின் கூடாரம் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும் நம்பித்தான் இயங்குகின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மஹாத்மா காந்தியின் வழியில் கொடுக்கக்கூடிய புறக்கணிப்புக்கள் வணிக ரீதியில் தமிழ்நாட்டு அரசை மட்டும் அல்ல, மத்திய அரசையும் வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரு வழியில் உதவக்கூடும்.

புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது உறவுகளே! உங்கள் அனைவருக்கும் உரிமையோடும் உறவோடும் தாயகத்தில் இருந்து நாம் முன்வைக்கின்ற வேண்டுகோளை தயவு செய்து செவிமடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நமக்கு உதவாத, நமக்கு எதிரான இந்தக் கேவலமான கீழ்த்தரமான நடிகர்களினதும், தயாரிப்பாளர்களினதும் திரைப்படத்தை புறக்கணியுங்கள். இவற்றை வாங்கி வெளியிடுகின்ற அன்பு உறவுகளுக்கும் இதே வேண்டுகோளைத்தான் நாம் முன்வைக்கின்றோம். அன்று எம்ஜிஆர் என்கின்ற நடிகர் தமிழ்த் தேசியத்திற்கு முன்னின்று உதவினார். இன்று ரஜனி என்கின்ற நடிகர் சுயநலத்திற்காக தமிழ்த்தாயை உதைக்கின்றார்.

புலம்பெயர்ந்த உறவுகளே! உங்களின் சிவாஜிப் படப் புறக்கணிப்பு நீங்கள் எடுத்து வைக்கின்ற முதல் அடியாக இருக்கட்டும். அதுவே நீங்கள் கொடுக்கின்ற முதல் இடியாகவும் இருக்கட்டும். இந்த இடி பேரிடியாக எதிர்காலத்தில் மாறட்டும். இன்று இங்கே அல்லல்பட்டு அகதிகளாக ஓடித்திரிகின்ற எமது உறவுகளுக்கு உங்களின் இந்த நடவடிக்கை தேவனின் உண்மையான வருகையாக அமையட்டும்.


நன்றி: தமிழ்நாதம்