உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

நடிகை குஷ்புவின் மமதை - இதுதான் நடந்தது! - அறிவுமதி விளக்கம்




சமீபத்தில் அண்ணன் அறிவுமதியை காரணம் காட்டி குஷ்பு பிரச்சனையை நினைத்தபடியெல்லாம் திரித்து எழுதின சில ஊடகங்கள்.. உண்மையில் நடந்தது என்ன. அறிவுமதி அவர்கள் தமிழ் ஓசை நாளிதழுக்கு அளித்த விளக்கம் அன்பர்கள் பார்வைக்கு.

அறிவுமதி: தன்மான தமிழர் குரலின் குறியீடு.!
அன்புடன்
இசாக்

நடிகை குஷ்புவின் மமதை - இதுதான் நடந்தது!



ஆழி பதிப்பகத்தின் நூல்கள் வெளியீட்டுவிழா.

ஆதி என்கிற என் நண்பனின் நூலும் அதில் ஒன்று. அவரது அழைப்புதான் என்னை அங்கே அழைத்துச் சென்றது.

பார்வையாளனாக இருந்த என்னை.. அண்ணன் வண்ணநிலவன் அவர்கள் வராத வெற்றிடத்தை நிரப்பும் வண்ணம். அண்ணன் கல்யாண்ஜி அவர்களின் ஒலிக்கவிதைகள் வெளியீட்டாளனாக மேடைக்கு என்னை அழைத்துச் சென்றது.

மேடையில், தங்கைகள் கனிமொழி, தமிழச்சி, குஷ்பு, அண்ணன் கல்யாண்ஜி, தம்பி ஸ்டாலின் இராசாங்கம் என் முன்வரிசையில் அமர்ந்திருந்தோம். தம்பிகள் அய்யனார், இராம். ஆனந்த்தராசன் மேடையில் இருந்தனர்.

நூல்கள் வெளியீட்டு நிகழ்வு முடிந்து, கல்யாண்ஜி அண்ணன் பற்றி நான்பேசி. அண்ணன் பேசி. தமிழச்சி பேசச் சென்றார்.

தலைவர் திருமாவளவன் அவர்கள் அரங்கிற்குள் நுழைய, அவரது இயக்கத்தினர் வாழ்த்துக் குரல் எழுப்ப, தங்கை கனிமொழி, அண்ணன் கல்யாண்ஜி, தம்பி ஸ்டாலின் இராசாங்கம் என அனைவரும் எழுந்து வணக்கம் சொல்லி... இருக்கையில் அவரையும் அமரச் சொல்லி அமர்ந்தோம்.

அவர் வருவது தெரிந்ததும்.. முகத்தைச் சட்டென திருப்பிக் கொண்டு.. தமிழச்சியின் பேச்சைக் கேட்பது போல் பாவனை செய்தார் குஷ்பு.

இருவரும் இந்தச் சந்திப்பை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்த்த பார்வையாளர்களுக்கு குஷ்புவின் அந்தப் பாவனை அருவருப்பை ஊட்டியது.

திரும்பி வணக்கம் சொல்லிவிட்டால்.. தானும் வணக்கம் சொல்லவேண்டும் என்கிற மனோநிலையில், தலைவர் திருமாவளவன் இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்தார். குஷ்பு திரும்பவே இல்லை.

அந்த நேரத்து திருமா அவர்களின் உளவியல் மனவலி என்னை அறுத்தது.

தங்கை தமிழச்சிக்குப் பிறகு. குஷ்பு அவர்கள் பேசச் சென்றார்.

தான் வெளியிட்ட நூல் பற்றியும், நூலாசிரியர் பற்றியும் பேசியதைவிட.. கடந்த ஆண்டில் அவர் ஏற்படுத்திய சர்ச்சை பற்றியே அதிகமாகப் பேசினார். பேச்சுக்கு இடையே, தோழர் திருமாவளவன் அவர்கள் இருக்கிற மேடையிலேயே நானும் நிற்கிறேன். இதில் நான் வெற்றிபெற்றுவிட்டதாகவே நினைக்கிறேன் என்று கர்வமாகக் கூறினார்.

அதற்குப் பிறகு அவர் பேசியதுதான் தங்கை கனிமொழி நக்கீரனில் சொல்லியிருப்பதைப் போல அநாகரிகத்தின் உச்சகட்டமாக இருந்தது.

''தோழர் திருமாவளவன் வந்தபோது நான் வணக்கம் வைக்கவில்லை.

வணக்கம் வைக்கவில்லை என்பதற்காக அவரது தோழர்கள் அதற்கொரு வழக்குப் போட்டாலும் போட்டுவிடுவார்கள்.

அதற்காக அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிடுகிறேன்.''

என்று சொல்லி, அவர்பக்கம் திரும்பி வணக்கம் வைப்பதாக இரு கைகளையும் கூப்பி...

''தோழர் திருமா.. வணக்கம்'' என்று கூறிய முறை இருக்கிறதே... அது தலைவர் திருமாவை மட்டுமன்று... ஒட்டுமொத்தத் தமிழர்களையே. தன் காலுக்குக் கீழ்போட்டு மேல் நிற்பதான மமதையில் கூறியதாகவே இருந்தது.

ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக, உலகத் தமிழர்களின் நல்லெண்ணமாக வளரும் தலைவர் திருமாவளவன் அவர்கள் வந்தபோது, குஷ்பு கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தது குறித்தோ, அவரைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டது குறித்தோ, இங்கு கவலையில்லை. அதுதான் அவருக்கு அவரது மனம் கற்றுக் கொடுத்த நாகரிகம் என்று விட்டுவிட்டோம்.

திரும்பிப் பார்க்காத அதே உறுதியில், வணக்கம் வைக்காத அதே திமிரில், மேடையில் வெளியிட்ட நூல்பற்றியும், நூலாசிரியர் பற்றியும் பேசாமல் எல்லாவற்றையும் மறந்து பெருந்தன்மையோடு மேடைக்கு வந்திருக்கும் ஒரு தலைவரை, வம்புக்கு இழுத்து வணக்கத்தைப் பிச்சை போடுவது போல் போட்டு, போட்டதோடு நில்லாமல், போடாவிட்டால் வழக்கு போடுவீர்கள் என்று, நக்கலான ஒரு சொல்லால் தலைவர் திருமாவை, தலைவர் திருமாவின் தலைமையின் கீழ் இயங்கும் இயக்கத்தை, அவரின் மீது உயிரையே வைத்திருக்கும் இலட்சோப இலட்சம் மக்களை ஏன் ஒட்டுமொத்தத் தமிழினத்தையே இழிவு செய்த அந்த அநாகரிகச் செயல்தான் என்னைச் சடக்கென எழவைத்து கண்ணுக்கெதிரே நடக்கும் மனித நேயமற்ற இந்தக் கொடுஞ்செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கத் தூண்டியது.

தன்னைத் தமிழ்நாட்டின் கருத்துருவாக்கத் தலைவியாய் ஆக்கிக் காட்டுவதாக உறுதி கொடுத்தவர்களின் முன் ஒரு முறைக்குப் பலமுறையாக ஒத்திகை பார்த்த பிறகு இங்கு வந்து அரங்கேற்றப்பட்ட நாடகமாகவே அவரது உரையாடல்களும், உடல் மொழிகளும் அமைந்திருந்தன. அவை, நம் தமிழனத்திற்கான மிகப்பெரிய ஆபத்துகளாக அமைவன என்பதையும் உளவியல் ரீதியாக உணர்ந்தே மேடைக்கு உந்தப்பட்டேன்.

தலைவர் திருமாவளவனை அவமானப்படுத்திவிட்ட திருப்தியில், எழுந்துபோக முயன்றவரை, அமருங்கள். உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டு, பேசத் தொடங்கினேன்.

இலக்கிய விழாவை இலக்கிய விழாவாகவே நடத்த வேண்டும் என்கிற நாகரிகத்தோடு நாங்கள் அனைவரும் பேசினோம். நீங்கள் அந்த மரபைவிட்டு வெளியே போய் அரசியல் பேசியதால்தான் நாங்களும் அரசியல் பேசவேண்டியிருக்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்க்கை மறுக்கப்பட்ட மக்களின் தலைவர் திருமாவளவன். மலமும் சிறுநீரும் கொடுத்து அவமானப்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் கொடுக்க வந்த தலைவர் திருமாவளவன். ஒவ்வொரு நிமிடமும், பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அவலநிலையை அதட்டிக் கேட்க வந்த தலைவர் திருமாவளவன்.

அவரை வென்றுவிட்டேன் என்று அகங்காரமாகப் பேசுகிறீர்கள். அவருக்கும் உங்களுக்கும் என்ன போரா நடந்தது?



அதோடு இல்லாமல், தேவையில்லாமல் அவர் வருகிறபோது, சராசரி மனிதப் பண்பாடு கூட இல்லாமல் அவமரியாதை செய்துவிட்டு,. அதற்குப் பிறகு அவரைக் கூப்பிட்டு, இந்தா வணக்கம். என்று கேவலப்படுத்துகிற உரிமையை உங்களுக்கு யார் தந்தது?

அப்படித்தான். பெரியார் திரைப்பட நூறாவது நாள் விழாவில், தங்கர்பச்சானின் ஒளிப்பதிவில் நடிக்காமல் போனதற்காக வருத்தப்படுகிறேன் என்று அழுது வழிந்தீர்கள்.

அதற்கு முன்னதாக. செயா தொலைக்காட்சியில் கூண்டில் நிறுத்தி கேள்விகள் கேட்ட நிகழ்ச்சியில், நாற்பத்தைந்து நிமிடங்கள் தங்கர் பச்சானைப் பற்றியே பேசிவிட்டு, இறுதியாக நீங்கள் இயக்கும் படத்திற்குத் தங்கர்பச்சான் தான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று உங்கள் தயாரிப்பாளர் கேட்டால், அதற்கு என்ன சொல்வீர்கள் என்று கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொன்னீர்கள்?

ரஐஞ ஒந ஐஊ?

அவன் யார்? என்று கேட்டீர்கள்.

ஏன் இப்படி, முரண்பாட்டின் முட்டையாக இருக்கிறீர்கள்?

அவன் யார் என்கிறீர்கள்.

அப்புறம்

அவர் ஒளிப்பதிவில் நடிக்க முடியாததற்காக வருத்தப்படுகிறேன் என்கிறீர்கள்.

எங்கள் தலைவர் வருகிறபோது வணக்கம் வைக்க மாட்டேன் என்கிறீர்கள். அப்புறம் மேடைக்கு வந்து, வழக்கு போடுவீர்கள் என்பதற்காக வணக்கம் வைக்கிறேன் என்கிறீர்கள்.

எங்கெங்கிருந்தோ பிழைக்க வந்தவர்களெல்லாம், இப்படி எங்கள் கலைஞர்களை, தலைவர்களை எப்படி வேண்டுமானாலும் கேலி பேசலாம். நக்கல் செய்யலாம். அவமானப் படுத்தலாம் என்கிற நிலையை எப்படி பொறுத்துக் கொள்வது? இந்த தமிழினம் ஏன் இப்படி அவலங்களுக்கு ஆளாகிறது?

என்று என் ஆதங்கங்களைப் பதிவு செய்து, என் தம்பியின் மனைவி என்கிற முறையில் கூறுகிறேன். கருத்துகள் கூற அனைவருக்கும் உரிமையுண்டு. அதே நேரத்தில், எம் தலைவரை எம் இனத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமையில்லை என்று கூறிவிட்டு வந்து அமர்ந்தேன்.

அதற்குப் பிறகுதான் குஷ்பு எழுந்து சாமியாடத் தொடங்கினார்.

இதெல்லாம் கேக்கறீங்க, எங்கருத்துக்கு என்ன சொல்றீங்க? அன்னைக்கு நான் வச்ச அந்தக் கருத்துக்கு என்ன சொல்றீங்க?

என்று ஆவேசப்பட்டு பேச...

பார்வையாளர்கள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க..

தலைவர் திருமா சென்று, குஷ்பு அவர்களைக் கொஞ்சம் ஒதுங்குங்கள், நான் பேசுகிறேன் என்று கூறி, தோழர்களை ஒற்றைச் சொல்லிலேயே அமைதிப்படுத்தி பேசத் தொடங்கினார்.

அவரது பேச்சிலும், உங்களின் கருத்துரிமையைப் பறிக்கும் உரிமை எங்களுக்கில்லை, அதே நேரத்தில் எங்களை புண்படுத்தும் உரிமையும் உங்களுக்கில்லை.

ஒரு கருத்தை வைக்கும்போது அந்த இன மக்களின் மனநிலை உணர்ந்து பேசவேண்டும். அப்படிப் பேசாமல்...

யார் இங்கே யோக்கியர்கள் என்று நீங்கள் பேசிய அந்தச் சொல்தான் மக்களைத் தன்னெழுச்சியாய் ஆத்திரப்பட வைத்தது.

மற்றப்படி நாங்கள் பெண்களுக்கோ பெண்ணுரிமைக்கோ எதிரானவர்களல்ல.

நாங்கள் பெரியாரின், அம்பேத்கரின் பிள்ளைகள் என்று பேசி முடித்தார்.

பேசி முடித்ததும், சமாதான முறையில் மறுபடியும் படம் எடுத்துக் கொண்டு, கூட்டம் கலைந்தது.

ஆம்.

இதுதான் நடந்தது.

இந்த இடத்தில், அறிவுமதியாகிய நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தி.மு.க. பிறந்த 1949-இல்தான் நானும் பிறந்தேன். கொள்கையில் கற்பு கெடாத ஒரு தி.மு.க. செயலாளருக்கு மகனாகப் பிறந்தேன்.

எம் இனத்திற்கு
எம் மொழிக்கு
ஓர் இடர் வந்தால்... எதிர்த்து நில்
என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தது...
திராவிட இயக்கம்.
தந்தை பெரியார்
தலைவர் கலைஞர்.
அய்ந்து வயதுக்கு முன்னதாகவே, ஒரு சீர்திருத்தத் திருமண நாளன்று, தி.மு.க. கொடியேற்றும்போது நிறுத்துங்கள் சிவப்பு மேலே இருக்கிறது கறுப்பை மேலே வைத்துக் கட்டுங்கள் என்று சொன்னவன் நான்.

கலைஞர் கவிஞரே இல்லை என்று ஓர் எழுத்தாளர் எகத்தாளமாய் எழுதியபோது கொதித்து மறுப்புச் சொன்ன ஒரே பிள்ளை நான்.

இருவர் படத்தில் எம் தங்கையின் அம்மா அப்பாவை மணிரத்னம் கொச்சை செய்தபோது வலிவாங்கி எதிர்த்த ஒரே அண்ணன் நான்.

வயது சொல்லி எம் தலைவரை பார்ப்பணியம் ஓவ்வெடுக்கச் சொன்னபோது ஓங்கிக் குரல் கொடுத்தத் தொண்டன் நான்.

அப்படித்தான் என் கண்முன்பாகவே எம் உயிருக்குயிராக நேசிக்கும் தலைவர் திருமாவை ஒருவர் அவமானப்படுத்துகிறபோது பொறுத்துக்கொள்ள இயலாமல் போய் பதில் சொன்னேன்.

எம் அன்பான ஊடகங்களே! என் அன்பான உறவுகளே!

இப்படிப்போய் எம் தலைவர் திருமாவின் வலிவாங்கி நான் பதில் சொன்னது நாகரிகமற்ற செயல் என்றால் மன்னியுங்கள். அந்த நாகரிகமற்ற செயலை நான் செய்து கொண்டேதான் இருப்பேன்.

இறுதிவரை பெரியாரின், அம்பேத்காரின் பிள்ளையாகவே இருப்பேன்.

இறுதிவரை கைநாட்டு மரபிலிருந்து எம்மைக் கையெழுத்து மரபிற்கு அழைத்து வந்த திராவிட இயக்கத்திற்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன்.

என்றும் எந்தக் குறுகிற வட்டத்திற்குள்ளும் சிக்கமாட்டேன். நான்.. உலகத் தமிழர்களின் செல்லப்பிள்ளை!