உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

ஒரு மனநோயாளியின் கலைவடிவம்

ஒரு மனநோயாளியின் கலைவடிவம்

ஒவ்வொரு கலை வடிவமும் மக்களைப் பண்படுத்துவதாகவே இருக்க வேண்டும். அதுவே அந்தப் படைப்புக்குப் பெருமை தரும். ஒடுக்கப்படுகிற, வஞ்சிக்கப்படுகிற மக்களின் வலிகளைக் கருவாக்கி வெளியாகும் கலைவடிவங்கள் காலம் கடந்து நிற்கும்.

கலைஞன் எனப்படுபவன் மண்ணின் மக்களின் வலி சுமந்தவனாக இருக்கவேண்டும். அவனால் மட்டுமே அம்மக்களுக்கான படைப்பைக் கொடுக்க முடியும். தொழிற்நுட்பம் என்றும் கலையம்சம் என்றும் பினாத்திக்கொண்டு திரியும் கலைவியாபாரிகளால், எள்ளளவும் மக்களுக்கான படைப்பைத்தர முடியாது.

மக்களின் வாழ்வியல் சார்ந்த அல்லது நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக கூறிக்கொண்டு தனது வக்கிரத்தையும், மன விகாரங்களையும் காட்சிப்படுத்துவதை கலையின் வடிவமாகப் பார்க்க முடியாது. சமூகம் அதை அனுமதிக்கவும் கூடாது.

நடுநிசி நாய்கள் என்னும் நாற்றமெடுத்த குப்பையை தமிழ் நாட்டு திரைரசிகர்கள் தலையில் கொட்டியிருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், சென்ற தனது படைப்புகளில் தமிழ்ப்பெயர் தாங்கிய பாத்திரங்களை ஒழுங்கீனர்களாக சித்தரித்த, தமிழர் விரோத சிந்தனையைத் தனது மூலைக்குள் ஒளித்துவைத்துக் கொண்டுள்ள திரைவியாபாரி என்பது பழைய செய்தி. மக்கள் விரோத சிந்தனையே இந்த அரைவேக்காட்டு கலைஞனின் மூலதனம் என்பது சமீபத்திய உண்மை.

ஆம், நடுநிசி நாய்கள் என்னும் படத்தின் கதை?

சமர் என்னும் ஒரு சிறுவன் 13 வயதாகும் பொழுது ஏற்கெனவே தாயை இழந்தவனுக்கு தந்தையின் போதைப்பழக்கமும், தவறான உறவுகளும் அறிமுகப் படுத்தப்படுகின்றன. அவனைக் காப்பாற்ற வரும் பக்கத்து வீட்டுப் பெண் மீனாட்சி மூலம் காவல்துறைக்கு தகவல் கிடைக்க தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து போகின்றார் அவன் தந்தை.

அதன் பின் சமர் என்னும் வீராவைத் தன் பொறுப்பில் வளர்க்கும் மீனாட்சியிடம் 5 வருடங்கள் நல்ல பிள்ளையாக இருக்கும் வீரா, அதன் பின் அவனைத் துரத்தும் பழைய எண்ணங்கள், கனவுகளால் அவளை நிர்ப்பந்தித்து உறவு கொள்கிறான். அவனை தன்னிடமிருந்து விலகும்படி சொல்லும் மீனாட்சி, தன் பழைய நண்பரொருவரைத் திருமணம் செய்கிறாள். முதலிரவின்பொழுது அந்த கணவனைக் கொன்று விட்டு, மீனாட்சியை தன்னுடன் வரும்படி கேட்கிறான் வீரா.

அந்த இரவில் படுக்கையறை தீப்பிடித்து எரிய, இறந்து விடுகிறாள் மீனாட்சி. நிஜத்தில். ஆனால் வீராவைப் பொறுத்தவரை அவள் கோர உருவத்துடன் அவனை மன்னித்து அவனுடன் சென்னை வந்து ஆளற்ற பண்ணை வீட்டில் வசிக்கிறாள்.

தனக்கு அறிமுகமாகும் பெண்களை மீனாட்சிக்காக கொல்வதாக நினைத்து கொன்று விடும் வீரா, கடைசியாக தன்னுடன் படித்த பள்ளி தோழி சமீராவை அவளது காதலனுடன் சினிமா பார்க்கும் போது அவனைக் கொன்று அவளை கடத்தி வருவதும், அவனது மனம் பிறழ்ந்த அட்டகாசங்களுக்கும், அடுத்தடுத்த பல கொலைகளுக்குப் பின் ஒரே ஒரு காவலதிகாரியால் சமீரா கடைசியில் மீட்கப்பட, சமர் என்னும் வீரா மன நோயாளி என்று ஒரு மருத்துவர் அதற்கான காரணம் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை என படத்தை முடித்து, தான் ஒரு மனநோயாளி என்பதை இரசிகனுக்கு உணர்த்துகிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

எதைச் சொல்ல வருகிறோம் என்ற நேர்மையற்ற ஒர் அற்பப்படைப்பு. எல்லாமுமே எதிர்மறையான பாத்திரங்கள். மேலோட்டமான கதை சொல்லல். சம்பவங்கள் எதிலும் நம்பிக்கை வராத அளவுக்கு அபத்தங்களின் தொகுப்பாக வடிவமைக்கப்பட்ட காட்சிகள். இப்படி நடுநிசி நாய்கள் படக்காட்சிகள் அனைத்தும் தெருநாய்களைப்போல ஒழுங்கற்றுக்கிடந்தாலும் அப்படத்தின் கருதான் நம்மை அதிர்வூட்டுகின்றன.

ஏற்கெனவே படம் பார்த்து விட்டுக் கொலை செய்த வரலாறு.. கொள்ளை ஆட்கடத்தல் போன்றவற்றைப் பாடம் படிப்பது போல சினிமாவைப் பார்த்து முயற்சித்த வரலாறு இதே தமிழ்நாட்டில் உண்டு. நடுநிசி நாய்கள் - மனிதர்களை மனநோயாளிகளாக்கி அலையவிடும்.

குழப்பங்களின் குவியலான இந்த ..........மேனன், சமீபத்தில் தமிழ்மக்கள் மீது நடத்திய உளவியல் சமர் தான் நடுநிசி நாய்கள். இந்த நாயின் நாயகன் பெயரும் சமர். என்ன கொடுமை சேட்டா?

கதாநாயகியின் தொப்புளில் கைப் படுவதே ஆபாசம் என்று வரையறை சொல்லும் சென்சார் அல்லது ராமேஸ்வரக் கரையில் கொடிய துன்பங்களை அனுபவிக்கும் அகதிகளின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட காட்சிக்கு அனுமதி மறுக்கும் தணிக்கைக்குழு, ஏழைவிவசாயக்கூலிகளின் வலியைப்பேச தடைவிதிக்கும் தணிக்கைக்குழு, உயிர்நேயத்தை, மனிதநேயத்தைப் பேசும் உணர்வுள்ள தமிழ் இயக்குநர்களின் படைப்புகளுக்கு தடைசொல்லும் தணிக்கைக்குழு, இந்த படத்தில் மேனன் வைத்துள்ள வக்கிரக் காட்சிகளில் தூங்கிக் கொண்டிருந்ததா?

இவ்வளவு கொடுமைக்கிடையிலும், நமக்குள்ள அச்சமெல்லாம் சமீபத்தில் இயக்குநர்கள் சங்க விழாவில் பாரதிராஜா, இந்த மேனன் பற்றி பேசியதை நினைத்து தான். அதிகார மையமும், அமைப்பும் இப்படிப்பட்ட கேடுகெட்ட படைப்பாளியை கொண்டாடுகின்றன. இது எங்கு போய் முடியுமோ?

எந்தப் பெயரில் இயங்க வேண்டும் என்ற தெளிவற்ற மனநோயாளியான .......மேனன் செம்மொழியான தமிழ் என்று தொடங்கும் பாடலை தமிழ்ப்பண்பாட்டுக்கு தொடர்பற்ற அபத்தக்குவியலாக்க் காட்சிப்படுத்தி தமிழார்வலர்களின் வயிற்றில் நெருப்பள்ளிக்கொட்டி மகிழ்ந்ததும், இதை முத்தமிழறிஞர் கண்டு இரசித்ததும் வரலாறு.

தமிழ்மக்களின் வாழ்வையும், தமிழ் மண்ணின் சூழலையும் உணர்ந்த படைப்பாளிகள் திரையுலகுக்குள் ஆளுமை செலுத்தத் தொடங்கியிருக்கும் இன்றைய சூழலில், அம்புலிமாமா அட்டுக்கதைகளை உலகத்தரம் என்று கதைவிட்டு ஊரை ஏமாற்றும் ஷங்கர்களும், தமிழ் மக்கள் விரோத கருத்தை மட்டுமே மண்டைக்குள் வைத்து திரியும் மேனன்களும் கொண்டாடப்படுவது நல்லதல்ல. மேனன் போன்ற கேடுகெட்ட கலைஞர்களின் வளர்ச்சி தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்த்திரையுலகுக்கே கேடு.

திரைக்குவந்துவிட்ட நடுநிசி நாய்களிடம் இருந்து தமிழர்கள் தன்னை எப்படியாவது பாதுகாத்துக்கொள்வார்கள். அந்த .....மேனன்களின் மூலைக்குள்ளிருக்கும் நாய்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டியது திரையுலகில் உள்ள உணர்வாளர்களின் கடமை ஆகும்.


நன்றி: தமிழ் முழக்கம் வெல்லும் (மார்ச் 1-15)